'களத்தில் இறங்கிய அண்ணாமலை'...! மதுரையில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் அதிரடிப் பணி...!
Annamalai takes field Action clean Vaigai River Madurai
மதுரையின் அடையாளமாகத் திகழும் வைகை நதியை தூய்மையாகவும், பசுமையாகவும் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற தூய்மைப் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பங்கேற்ற ‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை, இயற்கை பாதுகாப்பு ஒவ்வொரு குடிமகனின் தார்மீகப் பொறுப்பு என்றும், “சுத்தமான, வளமான தமிழகம்” என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று காலை மதுரையின் பெருமையாகவும், தமிழர் வாழ்வியலின் உயிர்த்துடிப்பாகவும் விளங்கும் புனித வைகை நதிக்கரையில், ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் ‘சுத்தமான, வளமான தமிழகம்’ இயக்கத்தின் கீழ் நடைபெற்ற தூய்மைப் பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் கலந்துகொண்டது மனநிறைவை அளித்தது. இயற்கையைப் பாதுகாக்கும் இந்தப் பயணத்தில் மக்களின் எழுச்சிமிகு பங்கேற்பு எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாரத்தின் முதல் வேலைநாளான திங்கள்கிழமையிலும் அதிகாலை முதலே திரளாகக் கூடிவந்து, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார். சமூக நலனில் அக்கறை கொண்ட இத்தகைய மனிதர்களே எந்த மாற்றத்திற்கும் அடித்தளமாக இருப்பார்கள் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
வைகை நதி என்பது வெறும் நீரோடை அல்ல; மதுரை மாநகரின் உயிர்நாடி, தமிழர் நாகரிகத்தின் சாட்சியம், விவசாயத்தின் ஆதாரம், ஆன்மிகப் பாரம்பரியத்தின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல தலைமுறைகளாக இந்த மண்ணின் கலாசாரம், வாழ்வாதாரம் மற்றும் இயற்கைச் செழிப்பை தாங்கி நிற்கும் வைகையை தூய்மையாகப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல; நமது வரலாறு, பண்பாடு, இயற்கை வளங்கள் மற்றும் எதிர்கால தலைமுறையின் வாழ்வுரிமையையும் பாதுகாப்பதாகும். எனவே பிளாஸ்டிக் கழிவுகள், வீட்டு மற்றும் தொழிற்சாலை கழிவுகளை நதிகளில் கொட்டும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து, இயற்கையை பாதுகாக்கும் பொறுப்புணர்வை அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், “சுத்தமான, வளமான தமிழகம்” என்ற கனவை அரசின் திட்டமாக மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடிமகனின் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டிய நேரம் இது. பசுமை, தூய்மை, இயற்கை பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு, வருங்கால தலைமுறைக்கு வளமான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும்” என்று அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Annamalai takes field Action clean Vaigai River Madurai