கிராமப்புறங்களிலும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்: மத்திய அரசு அதிரடித் தளர்வு!
LPG Cylinder Booking Gap in Rural Areas Reduced to 25 Days Central Government Relaxes Restrictions
கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நகர்ப்புறங்களைப் போலவே கிராமப்புறங்களிலும் அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோரும் 25 நாட்களுக்கு ஒருமுறை எளிதாகச் சிலிண்டர் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
முன்னதாக, ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எல்பிஜி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும் மட்டுமே சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது. பின்னர் எல்பிஜி விநியோகம் சீரடைந்ததும் நகர்ப்புறங்களில் இக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதிலும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் என்ற நடைமுறை தொடர்ந்து நீடித்து வந்தது.
தற்போது எல்பிஜி விநியோக நிலைமை முற்றிலும் மேம்பட்டுள்ளதை அடுத்து, கிராமப்புறங்களுக்கும் இந்தக் கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனது முகநூல் பதிவில், "தற்போது எல்பிஜி விநியோக நிலைமை சீரடைந்து நிலுவையில் இருந்த முன்பதிவுகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. இனி நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேறுபாடின்றி அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி நுகர்வோரும் 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மாற்றத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பெட்ரோலிய அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின் நகலையும் அமைச்சர் பகிர்ந்துள்ளார். முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்பப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
LPG Cylinder Booking Gap in Rural Areas Reduced to 25 Days Central Government Relaxes Restrictions