பாசப் போராட்டமா...? கொலை வெறியா...? - குடும்பத் தகராறில் பெற்ற மகனையே தீர்த்துக்கட்டிய தொழிலாளி...! - உறைந்துபோன அக்கம்பக்கத்தினர்...!
love affair murderous rampage worker who killed his own son family dispute neighbors who froze
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே நிகழ்ந்த குடும்ப தகராறு, தந்தை-மகன் உறவை சோக முடிவுக்கு தள்ளிய பரபரப்பான சம்பவமாக மாறியுள்ளது.திருச்சிற்றம்பலம் அருகிலுள்ள மேல ஒட்டங்காடு காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). இவர் தேங்காய் உரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவரது மனைவி சாந்தி தினக்கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.மகள் வெளியூரில் தங்கி பணியாற்றி வரும் நிலையில், மகன் மணிகண்டன் (29) குடும்பத்துடன் வசித்து வந்தார். திருமணம் ஆகாத மணிகண்டன், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுப்பிரமணியனும், மணிகண்டனும் அடிக்கடி மது அருந்திவிட்டு வீடு திரும்பியதால், குடும்பத்தில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் நிலவி வந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தந்தை-மகன் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், தந்தையை தாக்கிவிட்டு மணிகண்டன் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் நள்ளிரவு நேரத்தில் மீண்டும் வீடு திரும்பிய மணிகண்டன், கடும் சோர்வில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில், மகன் தாக்கிய சம்பவத்தால் ஆத்திரமடைந்திருந்த சுப்பிரமணியன், அருகில் இருந்த தேங்காய் உரிக்கும் இரும்புக் கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சிற்றம்பலம் காவலர்கள், மணிகண்டனின் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், குடும்ப தகராறு காரணமாக மகனை, தந்தையே கொன்ற இந்த சம்பவம் மேல ஒட்டங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
love affair murderous rampage worker who killed his own son family dispute neighbors who froze