மறந்துவிட்டதா தேர்தல் வாக்குறுதி...? பணிநிரந்தரம் கேட்டுப் பகுதி நேர ஆசிரியர்கள் விடுத்துள்ள அவசரக் கோரிக்கை...!
Have you forgotten election promise Urgent request from part time teachers permanent employment
கடந்த 16 கல்வியாண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் 2011–2012 கல்வியாண்டில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கைக் கல்வி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்காக 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

அவர்களில் தற்போது 11,773 ஆசிரியர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.15-க்கும் மேற்பட்ட கல்வியாண்டுகளை கடந்தும், இவர்கள் இன்னும் தற்காலிக பணியாளர்களாகவே தொடர்கின்றனர். இதனால், பணிநிலைத்தன்மை இன்றியும், மாதம் ரூ.15 ஆயிரம் என்ற குறைந்த ஊதியத்திலேயே குடும்பங்களை நடத்த வேண்டிய கடினமான சூழலில் உள்ளனர்.
இதே பாடப்பிரிவுகளில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் காலமுறை ஊதியத்தைப் போலவே, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஒரே கல்வித்தகுதி, ஒரே பாடப்பிரிவு, ஒரே பணிச்சுமை கொண்ட ஆசிரியர்களுக்கு வேறுபட்ட ஊதியம் வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை என்று ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை உள்ளிட்ட பாடங்களை கற்பித்து வரும் ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற அடிப்படையில் நியாயமான சம்பள அமைப்பு கொண்டு வர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
தவெக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டபடி, தற்காலிக பணியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு கொள்கை முடிவாக ஏற்று, இந்த முதலாவது சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.
11,773 ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
English Summary
Have you forgotten election promise Urgent request from part time teachers permanent employment