ஒரே குடும்பத்தில் பறிபோன இரு உயிர்கள்...! பைக் மீது அரசுப் பேருந்து மோதி ஆசிரியை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்கப் பலி...!
Two lives lost same family government bus hit bike killing teacher and her daughter spot
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்து, ஒரே குடும்பத்தின் வாழ்வை கணநேரத்தில் சிதைத்த சோக சம்பவமாக மாறியுள்ளது.கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி வளர்மதி (36). அவர் பசுவந்தனை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
தம்பதியருக்கு அஸ்விகா (9) என்ற மகள் உள்ளார். அவர் கோவில்பட்டி பாரதிநகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.வெளிநாட்டில் பணியாற்றி வந்த ரமேஷ், அண்மையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார்.நேற்று காலை வழக்கம்போல் வளர்மதியும், அஸ்விகாவும் பள்ளிக்கு சென்றனர்.

பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் இருவரையும் அழைத்துக்கொண்டு ரமேஷ் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.பசுவந்தனை சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்பாராத விதமாக அந்த பேருந்து, ரமேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.இந்த மோதி ஏற்பட்ட அதிர்ச்சியில் ரமேஷ், வளர்மதி, அஸ்விகா ஆகிய மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.விழுந்த நிலையில் வளர்மதியும், அஸ்விகாவும் பேருந்தின் முன்சக்கரத்தில் சிக்கிக் கொண்டனர்.
பேருந்தின் சக்கரம் இருவரின் தலைப்பகுதியில் ஏறி இறங்கியதால், வளர்மதி மற்றும் அஸ்விகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கோர விபத்தில் ரமேஷ் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.படுகாயமடைந்த ரமேஷ் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உயிரிழந்த வளர்மதி மற்றும் அஸ்விகாவின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அதே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கணவரின் கண்முன்னே மனைவியும், மகளும் உயிரிழந்த இந்த சோக சம்பவம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Two lives lost same family government bus hit bike killing teacher and her daughter spot