மாசி மகாமகப் பணிகள் தீவிரம்: கும்பகோணத்தில் கால்வாய் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் வினோத்!
Kumbakonam Canal Desilting Launched Ahead of Masi Mahamaham Minister Vinoth Inspects Works
கும்பகோணத்தில் வரவிருக்கும் மாசி மகாமகத் திருவிழா தயாரிப்புப் பணிகளின் ஒருபகுதியாக, நகரப் பகுதிகளில் உள்ள நீர் வழிப்பாதைகளைச் சீரமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, காவிரி நீர் தடையின்றிச் சென்று சேரும் வகையில், கொட்டையூரிலிருந்து மேலக்காவேரி வரையிலான 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாய்க்கால்களில் மண்டிப்போயுள்ள காடாமணிச் செடிகள் மற்றும் அடர்ந்த புதர்களைப் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றித் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இந்தப் பணியினைத் தொடங்கி வைத்த வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத், "கும்பகோணம் காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் அனைத்தும் ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பாகவே விரைந்து முடிவடையும். கல்லணையிலிருந்து காவிரி நீரைத் திறப்பது தொடர்பாகக் கட்சித் தலைவரிடமிருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். மேலும், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து கழிவுநீர் வாய்க்கால்களில் கலப்பதைத் தடுக்கும் வகையில், அடுத்த இரண்டு நாட்களில் அந்த இணைப்புகள் அனைத்தும் அடைக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
கும்பகோணம் ஆணையர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "எனக்கு அப்படி ஒரு தகவல் வரவில்லை. ஒருவேளை கங்கையிலேயே தூர்வாரப்படாமல் இருந்தாலும், நம் ஊரை நாம் தானே தூர்வாரிச் சுத்தப்படுத்த வேண்டும்; ஏனெனில் இது தமிழ்நாடு" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார.
தொடர்ந்து பேசிய அவர், கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மாசி மகாமகத் திருவிழா குறித்த முன்ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி கும்பகோணத்திற்கு வருகை தந்து, விழா தொடர்புடைய கோயில்களில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாசி மகாமகப் பெருவிழா மிகப்பிரம்மாண்டமான முறையில் மாநில அரசால் நடத்தப்படும் என்றும் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
English Summary
Kumbakonam Canal Desilting Launched Ahead of Masi Mahamaham Minister Vinoth Inspects Works