ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இந்தியாவின் அதிநவீன இஓஎஸ்-05 செயற்கைக்கோள் வெற்றிப்பாதையில்: இஸ்ரோவின் புதிய வரலாற்றுச் சாதனை!
ISRO Successfully Launches EOS-05 Earth Observation Satellite via GSLV-F17
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), தனது அதிநவீன மற்றும் நாட்டின் முதல் அதிக எடைகொண்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-05 (EOS-05)-ஐ ஜிஎஸ்எல்வி-எஃப்17 (GSLV-F17) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, நள்ளிரவில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் குடைகளுடன் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டுகளிக்க, இன்று அதிகாலை 2.55 மணியளவில் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணை நோக்கிப் பாய்ந்தது.
சுமார் 2,367 கிலோ எடைகொண்ட இந்த அதிநவீனச் செயற்கைக்கோள், ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் திட்டமிட்டபடி பூமியில் இருந்து சுமார் 36,000 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவி ஒத்திசைவுச் சுற்றுப்பாதையில் (Geosynchronous Orbit) துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. பூமியின் சுழற்சி வேகத்திற்கு இணையாகப் பயணிக்கும் இந்தச் செயற்கைக்கோள், விண்ணில் இந்தியாவின் விசேஷக் கண்ணாகச் செயல்பட்டு நிகழ்நேரப் படங்களை வழங்கவுள்ளது. இது குறிப்பாக வேளாண்மைத் துறை வளர்ச்சி மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு நடவடிக்கைகளுக்குப் பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது இந்த ஆண்டில் இஸ்ரோவின் முதல் வெற்றியாகவும் அமைந்தது.
முந்தைய சில சவால்களுக்குப் பிறகு கிடைத்த இந்த மகத்தான வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், "ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 107-வது ஏவுதல் நிகழ்வான இத்திட்டத்தில், ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் இஓஎஸ்-05 செயற்கைக்கோளைத் திட்டமிட்டபடி துல்லியமாகச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையின் 19-வது வெற்றிகரமான பணியாகும்" என்று பெருமையுடன் அறிவித்தார்.
இந்த வரலாற்றுச் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "ஜிஎஸ்எல்வி-எஃப்17 மூலம் இஓஎஸ்-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது நாட்டின் பெருமைக்குரிய தருணம் என்றும், இது இஸ்ரோவின் மற்றுமொரு சிறப்பான சாதனை மைல்கல்" என்றும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
English Summary
ISRO Successfully Launches EOS-05 Earth Observation Satellite via GSLV-F17