ரிப்பன் மாளிகை முன் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: அமைச்சர்கள் நடத்திய 2 மணி நேரப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு!
Chennai Sanitation Workers 15-Day Protest Ministers Hold 2-Hour Talks Promise Welfare Measures
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தின் வெளியே பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்குத் தீர்வு காணும் பொருட்டு, மாநில அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவினர் நேரில் சென்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தூய்மைப் பணியாளர்களுடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் போது பேசிய அமைச்சர் ஆனந்த், "முதலமைச்சர் விஜய் மீது கொண்ட நம்பிக்கையால் எங்களை இன்முகத்துடன் வரவேற்றுள்ளீர்கள். முந்தைய ஆட்சியாளர்கள் கஜானாவைக் காலி செய்துவிட்டுச் சென்றுள்ள போதிலும், மக்களின் வரிப்பணத்தைச் சரியாகச் சேமித்துத் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்" என உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், இது உங்களது சொந்த அரசாங்கம் என்றும், உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
15 நாட்களாக யாருக்கும் எவ்வித இடையூறும் இன்றி ராணுவக் கட்டுப்பாட்டுடன் அமைதியான முறையில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் ஒழுக்கத்தைப் பாராட்டிய அமைச்சர் ராஜ்மோகன், இது போராட்டம் போல் அல்லாமல் ஒரு மாநாடு போலக் காட்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தூய்மைப் பணியாளர்கள் தெருவில் அமர்ந்து போராடுவதைப் பார்த்து முதலமைச்சர் மிகுந்த மனவேதனை அடைகிறார். முந்தைய ஆட்சியில் போராடியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது போராட்டத்தில் ஈடுபடும் யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களே ஆகியுள்ளதால் தங்களுக்குச் சற்று அவகாசம் தேவை" எனக் கேட்டுக்கொண்டார்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சுமுகமான பேச்சுவார்த்தையின் முடிவில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, அடுத்த மாதத்தில் இருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப்படி வழங்கப்படும் என்றும், நகரின் 197 வார்டுகளிலும் அவர்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்போராட்டத்தின் போது தூய்மைப் பணியாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்படும் என்று அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
English Summary
Chennai Sanitation Workers 15-Day Protest Ministers Hold 2-Hour Talks Promise Welfare Measures