திருச்செங்கோடு கொடூரம்: கல்லூரி பேருந்து மோதி அக்காள், தங்கைகள் உள்பட 4 மாணவிகள் பரிதாப பலி; முதல்வர் நிதியுதவி! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் அருகே உள்ள சக்கராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சேகர் - அமுதா தம்பதியினரின் மகள்கள் சுபிதா கலைச்செல்வி (19), நிவேதிதா (16) மற்றும் தனுஸ்ரீ (13). இவர்களில் மூத்த மகள் சுபிதா கலைச்செல்வி ராசிபுரம் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். இளைய மகள்கள் இருவரும் எலச்சிபாளையம் அரசுப் பள்ளியில் முறையே 11 மற்றும் 7-ஆம் வகுப்புகளில் பயின்று வந்தனர்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தங்கைகளான நிவேதிதா மற்றும் தனுஸ்ரீயை வீட்டிற்கு அழைத்து வர, அக்கா சுபிதா கலைச்செல்வி தனது இருசக்கர வாகனத்தில் (மொபட்) பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர் தங்கைகள் இருவரையும், அவர்களுடன் பயிலும் சித்தப்பா ரமேஷ்பாபுவின் மகளான 6-ஆம் வகுப்பு மாணவி அபிநயாவையும் (12) மொபட்டில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.

நான்கு மாணவிகளும் சக்கராம்பாளையம் பிரிவுச் சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மொபட் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தின் தாக்கத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுபிதா கலைச்செல்வி, நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 4 மாணவிகளும் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எலச்சிபாளையம் காவல்துறையினர், உயிரிழந்த மாணவிகளின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காள்-தங்கைகள் மூன்று பேர் மற்றும் உறவினர் சிறுமி என 4 பிஞ்சு உயிர்கள் ஒரே விபத்தில் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் ஈடுசெய்ய முடியாத பெருஞ்சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க உடனடியாக உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragic Moped-Bus Collision Near Tiruchengode Claims Lives of 4 School and College Girls


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->