கரூரில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி! அதிரடியாக கைதுசெய்த சிபிஐ!
Karur CBI Arrest
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் நீண்ட காலமாக தேடப்பட்ட கோவையைச் சேர்ந்த சிவக்குமார் என்ற நபர் கரூரில் புவனேஸ்வர் சிபிஐ போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (49), சண்டீகர் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேருடன் இணைந்து 2016ஆம் ஆண்டு பெங்களூரில் ஒரு நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனம், முதலீடு செய்வோருக்கு பணத்தை இரட்டிப்பாக வழங்குவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து, நாடுமுழுவதும் 5,000க்கும் மேற்பட்டோரிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் சேகரித்தது.
இருப்பினும், முதலீட்டாளர்களுக்கு வட்டியும், திருப்பி பணமும் வழங்கப்படாமல் ஏமாற்றம் ஏற்பட்டது. சண்டீகர் மாநிலத்திலிருந்து மட்டும் 50க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கு உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர, 2017ல் அந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேரைத் தவிர, தலைமறைவாக இருந்த சிவக்குமார் கரூரில் தாந்தோணிமலை கணபதி நகரில் உறவினர் வீட்டில் தங்கியிருப்பது குறித்து சிபிஐயுக்கு தகவல் கிடைத்தது.
பின்னர், புவனேஸ்வர் சிபிஐ அதிகாரி ஷனட்டன் தாஸ் தலைமையிலான குழுவினர் கரூருக்கு வந்து, மாவட்ட காவல்துறை அனுமதியுடன் சிவக்குமாரை கைது செய்து, விசாரணைக்கு பிறகு மருத்துவ பரிசோதனை முடித்துப் புவனேஸ்வருக்கு அழைத்துச் சென்றனர்.