'இட்லி மாவு இருக்கா'...? கஸ்டமர் போல் நடித்து அரங்கேறிய கொடூரம்..! திருவள்ளூர் பெண் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்...! -கொலையாளி சொன்ன அதிர்ச்சி காரணம்!
Is there any idli flour cruelty pretending customer dramatic twist Thiruvallur woman murder case shocking reason given by murderer
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள பழவேற்காட்டின் பாபநாரிஷி கோவில் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60) அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வனஜா (55), வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து விற்பனை செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் ராதாகிருஷ்ணன் கடைக்குச் சென்ற நிலையில், வீட்டில் வனஜா மட்டும் தனியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கதவை திறந்து உள்ளே சென்றபோது, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் வனஜா கிடந்ததை கண்டு கதறி அழுதார்.இந்தத் தகவலறிந்த திருப்பாலைவனம் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை பதிவு செய்து தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.
இந்த விசாரணையில், முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், இட்லி மாவு வாங்க வந்தவர் போல் நடித்து வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் வனஜாவின் கழுத்தில் சரமாரியாக குத்தியதுடன், அவர் கீழே சரிந்ததும் கழுத்தில் அணிந்திருந்த தாலி, தாலிச்சரடு, தங்க வளையல்கள் உள்ளிட்ட சுமார் 12½ சவரன் நகைகளை பறித்துக் கொண்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பிச் சென்றதும் கண்டறியப்பட்டது.
இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளின் காட்சிகளை ஆய்வு செய்த காவலர்கள், குற்றவாளி பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை அடையாளம் கண்டனர். அதன் அடிப்படையில் பழவேற்காடு குளத்துமேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அதில், அவர் ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கத்தைச் சேர்ந்த யுகேந்தர் என்ற அப்துல் ரகுமான் என்பது உறுதியானது. மேலும், இந்தக் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றியதும் விசாரணையில் அம்பலமானது.காவலர்களிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருவதாகவும், காதலித்து திருமணம் செய்த மனைவியுடன் பழவேற்காட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
புதிய வீடு கட்டி வந்ததால் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், அதனால் வனஜா வீட்டை பல நாட்களாக கண்காணித்து, அவர் தனியாக இருக்கும் நேரத்தை அறிந்து திட்டமிட்டு கொலை செய்து நகைகளை பறித்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அப்துல் ரகுமான் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 12½ சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
English Summary
Is there any idli flour cruelty pretending customer dramatic twist Thiruvallur woman murder case shocking reason given by murderer