சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி...10 ஆண்டுகள் கம்பி எண்ணப்போகும் கொடூரன்...! - நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு...!
injustice done girl cruel man sentenced 10 years prison court dramatic verdict
கடந்த 2019ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் மனிதநேயத்தை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. ரமேஷ் (30) என்ற நபர், 13 வயது பள்ளி மாணவியிடம் காதல் பெயரில் ஏமாற்று வார்த்தைகள் பேசி, பின்னர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.அந்நேரம் பணியாற்றிய காவல் ஆய்வாளர் அங்கையர்கன்னி மேற்கொண்ட ஆழமான புலனாய்வின் மூலம், குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, விரிவான விசாரணை முடிவில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில், குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி சுரேஷ்குமார் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.6,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்து கண்காணித்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), வள்ளியூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, வழக்கை திறம்பட புலனாய்வு செய்த அங்கையர்கன்னி (தற்போது EOW, சென்னை), விசாரணைக்கு துணைநின்ற தலைமை காவலர் செல்வபுனிதா மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர வாதாடிய அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரின் பணியை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ணகுமார் பாராட்டி வாழ்த்தினார்.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் காவலர்களின் தீவிர நடவடிக்கைகளின் பலனாக, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 8 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில், 1 நபருக்கு மரண தண்டனை, 2 நபர்களுக்கு உயிர்நீங்கும் வரை ஆயுள் தண்டனை, 1 நபருக்கு ஆயுள் தண்டனை, 1 நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 1 நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான, தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
English Summary
injustice done girl cruel man sentenced 10 years prison court dramatic verdict