கொங்கு மெஸ் சீல் உடைப்பு.. அதிரடியாக இறங்கிய ஐ.டி அதிகாரிகள்.. கரூரில் தொடரும் பரபரப்பு..!!
Income Tax officials raid Kongu Mess
கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் அவரது நெருங்கிய நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மே 26 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் ஓனர் மணி என்னும் சுப்பிரமணி, பால விநாயகர் ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் தங்கராஜ், காளியம்பாளையம் பெரியசாமி உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

வருமானவரித்துறையினர் சோதனையின் போது இவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் தொடர்புடைய இடங்களில் ஆரம்பத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் நேரில் ஆஜராக மாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகாததால் சீல் வைக்கப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் பாதுகாப்போடு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கரூர்-கோவை சாலையில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அந்த உணவகத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு சீல் வைத்த நிலையில், சீல் அகற்றப்பட்டு வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நான்கு கார்களில் வந்த 15க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே ராயனூர், கொங்கு அவன்யூ பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீட்டிலும் நேற்று காலை முதல் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Income Tax officials raid Kongu Mess