மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளின் பிறப்பிடமாக உள்ள மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளின் பிறப்பிடமாக உள்ள பச்சைமலைக் குன்றுகளின் மருதையாற்றில் உள்ளது .இங்கு பெரம்பலூர் நகராட்சியில் அரணாரை, துறைமங்கலம் மற்றும் நகர்ப்பகுதிகளில் என மொத்தமுள்ள 21 வட்டங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் தோராயமாக வெளியேறும் 20 லட்சம் லிட்டர் கழிவு நீரானது, கழிவுநீர்த் தொட்டிகள், கழிவுநீரேற்று நிலையங்கள் உள்ளிட்டவைகள் மூலம் குழாய்கள் வழியே நெடுவாசல் அருகே அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து சேர்கிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரானது ஓடையில் விடப்பட்டு மருதையாற்றில் கலந்து கல்பாடி எறையூர், பனங்கூர், குரும்பாபாளையம் வழியே கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்திற்குச் செல்கிறது.

இக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம், ஏமாற்றமே மிஞ்சியது. தொடங்கிய சிறிது காலத்திலேயே சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளிவரும் நீரில் துர்நாற்றம் வீசத்தொடங்கியதோடு, நீரும் கருமை நிறத்தில் வரத்தொடங்கியது.  மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஆனால், கடந்த ஆண்டு பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் வெளிப்படையாகவே போதிய நிதியில்லாத காரணத்தால் கழிவுநீர் சுத்திகரிக்காமல் மருதையாற்றில் விட வேண்டிய நிலையுள்ளதை வெளிப்படையாக அறிவித்திருந்தது பெரம்பலூர் மக்களிடைய பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு இயற்கையின் அருங்கொடையான நதிநீரை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலை நாசப்படுத்துவது, இயற்கைக்கும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதித்த மக்களுக்கும் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

மருதையாற்றில் சுத்திகரிக்கப்படாத பாதாளச் சாக்கடைக் கழிவு நீர் கலப்பதால் நிலமும், நிலத்தடி நீரும் மாசுபட்டு மக்கள் கொடும் நோய்த்தொற்றுக்கும், கொசுக்கடிக்கும் ஆளாகியுள்ளனர். 

நெடுவாசலைத் தொடர்ந்து க.எறையூர், குரும்பாபாளையம் மற்றும் கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கமும் இக்கழிவுநீரால் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு சுகாதாரத் துறையோ, மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, நீர்வளத்துறையயோ, மாவட்ட நிர்வாகமோ இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும்.

ஆகவே, பெரம்பலூர் மக்களின் துயர நிலையை உணர்ந்தும், நீர்நிலைகளைப் பாதுகாத்து, நிலம், நீர், காற்று மாசுபடாமல் தடுத்து, தூய்மையான வாழிடச் சூழலை மக்களுக்கு வழங்க வேண்டியது நல்ல அரசின் தலையாய கடமை என்பதை உணர்ந்து பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

பாதாளச் சாக்கடை கழிவுநீரைச் சுத்திகரிக்க இயலாவிட்டால், சுத்திகரிப்பு நிலையத்தை நிரந்தரமாக மூடுவதோடு, மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Marudaiyar, the mixing of sewage waste in the underground drainage must be stopped Seeman emphasizes


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->