ஈரான் போர் தாக்கம்: ரூ.100 கோடி தென்னை நார் ஏற்றுமதி முடக்கம்! - பெரிய பாதிப்பு !!!
Impact Iran War Coconut fiber exports worth100 crore frozen Big impact
பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை நார் தொழில் முக்கியமான வாழ்வாதாரமாக வளர்ந்து வருகிறது. தென்னை மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் நார் மற்றும் நார் துகள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கியமான பொருட்களாகும்.
இந்தியா முழுவதும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தமிழகத்தில் மட்டும் 12 ஆயிரம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.பொள்ளாச்சி பகுதியில் தயாரிக்கப்படும் தென்னை நார் மற்றும் நார் துகள்கள் கன்டெய்னர்களில் ஏற்றி சென்னை, தூத்துக்குடி, கொச்சி போன்ற முக்கிய துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அங்கிருந்து கப்பல் மூலம் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பின்னர் அந்த நாடுகளில் இப்பொருட்கள் மதிப்பு கூடிய தயாரிப்புகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில் தற்போது ஈரான்–இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவி வரும் போர் சூழ்நிலை உலக வர்த்தகத்தையே பாதித்துள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலையில் ஈரான் தனது கடல் எல்லைகளை மூடியதால் சர்வதேச வர்த்தக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி மற்றும் கேரளத்தின் கொச்சி துறைமுகங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டிய தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றன.
இதனால் இந்தத் துறையை சார்ந்த வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தெரிவித்ததாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 11 லட்சம் டன் தென்னை நாரும், 20 லட்சம் டன் தென்னை நார் துகள்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவை உலகின் 125க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்கனவே அமெரிக்கா விதித்த வரி உயர்வு காரணமாக இந்தத் துறை பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டதால் தொழிலில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் போர் காரணமாக ஈரான் கடல் எல்லைகளை மூடியதால் வெளிநாட்டு சந்தைகளுக்கு தென்னை நார் பொருட்களை அனுப்புவது குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போர் இன்னும் இரண்டு மாதங்கள் நீடித்தால் ரூ.1000 கோடி வரை தென்னை நார் மற்றும் நார் துகள் ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே மத்திய அரசு உள்நாட்டு சந்தையை அதிகரிக்கும் வாய்ப்புகளை கயிறு வாரியம் மூலம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதோடு கயிறு வாரியம் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்த குழுவை அமைத்து சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, நேபாளம், பூடான், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்பி புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராய வேண்டியது அவசியம் எனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
English Summary
Impact Iran War Coconut fiber exports worth100 crore frozen Big impact