அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் திருமணம்: ஷாருக்கான் முதல் ஐஸ்வர்யா ராய் என ஸ்டார்ஸ் படையெடுப்பு!
Arjun Tendulkar Sania Santokh wedding Stars invade from Shah Rukh Khan to Aishwarya Rai
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், கிரிக்கெட் ஆல்-ரவுண்டருமான அர்ஜுன் டெண்டுல்கர், தொழிலதிபர் சானியா சந்தோக் என்பவரை மார்ச் 5, 2026 அன்று மும்பையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தை சச்சின் டெண்டுல்கரைப் போலவே மிகவும் அமைதியான குணம் கொண்டவர் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். திருமண நிகழ்விலும் அவர் பெரிதாக சிரிக்காமல் இருந்ததால், “அப்பாவைப் போலவே இன்ட்ரோவெர்ட்” என்று சிலர் சமூக வலைத்தளங்களில் கலாய்த்தனர். ஆனால், மணமகள் சானியா சந்தோக்கிற்கு மாலை அணிவிக்கும் போது அர்ஜுன் புன்னகையுடன் காணப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை, அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியவர். பின்னர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மாறிய அவர் தற்போது கோவா அணிக்காக விளையாடி வருகிறார். திறமையான இடதுகை வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அவர் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
அர்ஜுனும் சானியாவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். மணமகள் சானியா சந்தோக் மும்பையைச் சேர்ந்த இளம் தொழிலதிபர். புகழ்பெற்ற தொழிலதிபர் ரவி காய் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், டெண்டுல்கர் குடும்பத்துடன் நீண்ட காலமாக நெருங்கிய உறவு வைத்திருப்பவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். கிரிக்கெட் மற்றும் சினிமா உலகின் முன்னணி பிரபலங்களான எம்.எஸ். தோனி, ஷாருக்கான், முகேஷ் அம்பானி, ஐஸ்வர்யா ராய், அமீர்கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
மகனின் திருமணத்தில் சச்சின் டெண்டுல்கர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். மணமக்கள் மீது மலர்கள் தூவி அவர்களை வாழ்த்திய தருணம் விழாவில் கலந்து கொண்டவர்களை கவர்ந்தது.
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி தனது மனைவி சாக்ஷியுடன் திருமண விழாவில் கலந்து கொண்டார். பொதுவாக கைபேசியை அதிகம் பயன்படுத்தாதவர் என அறியப்படும் தோனி, அந்த விழாவில் கைபேசியை கையில் வைத்திருந்த காட்சி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
திருமணத்திற்கு முன்பாக நடைபெற்ற மெஹந்தி மற்றும் சங்கீத் விழாக்களும் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியில் அர்ஜுனின் சகோதரி சாரா டெண்டுல்கர் நடனமாடிய காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அதேபோல், நீதா அம்பானி உள்ளிட்ட பலர் அழகிய ஆடைகளுடன் கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.
சமீபத்தில் நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் திருமணமும் பிரபலங்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், மார்ச் 6ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் திருமணமும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Arjun Tendulkar Sania Santokh wedding Stars invade from Shah Rukh Khan to Aishwarya Rai