இசைஞானி இளையராஜா பிறந்து, வாழ்ந்த வீடு…..!
இசைஞானி இளையராஜா பிறந்து, வாழ்ந்த வீடு…..!
தலையில், சும்மாடு வைத்து, மண் சுமந்து சென்று கொண்டிருந்த அந்த சிறுவனின் கண்களில் சோகம் ததும்பிக் கொண்டிருந்தது. தன் வறுமையின் சூழ்நிலையை எண்ணி மனம் வருந்திக் கொண்டிருந்த சமயத்தில், அந்த வைகை அணை கட்டும் பணியில், கல்லை உடைத்துக் கொண்டிருந்த, ஓசை கூட, அவனுக்குச் சங்கீதமாகத் தெரிந்தது.

தற்போதைய தேனி மாவட்டம், பண்ணைப்புரம், என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவன் அந்த சிறுவன். வீட்டிற்கு மூன்றாவது, ஆண் பிள்ளை. அவனது, தந்தை ஒரு எஸ்டேட் நிறுவனத்தில், பிரதானியாக இருந்தார். அதனால், நன்கு வசதியாகத் தான் வளர்ந்தான், அந்த சிறுவன்.
ஆனால், அந்த சிறுவன், இளமைப் பருவத்தை எட்டிய போது, எதிர்பாராதவிதமாக அவனது தந்தை இறந்து போனதும், அந்தக் குடும்பம் வறுமையில், தத்தளித்து. தன் குடும்ப வறுமையைப் போக்குவதற்காக, இந்தக் கடுமையான வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானான்.

தன் அண்ணன்களுடன், ஊர் ஊராகச் சென்று, கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டம் நடைபெறும் ஊர்களில், மேடையில், கச்சேரி செய்து தான், அவர்கள் காலம் தள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை!
அதிலும், அந்த நிகழ்ச்சிகளும், எப்போதாவது வந்தால் தான் உண்டு. சங்கீதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமிருந்த அந்த சிறுவனுக்கு, உதவவோ, சங்கீதத்தைக் கற்றுத் தரவோ, அந்த சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை.
ஏன், அதற்கான வசதி கூட, அவர்களுக்கு இல்லை. ஆனால், அதே சிறுவன், வளர்ந்து, பல்வேறு இன்னல்களுக்கிடையே, சங்கீதம் கற்று, தற்போது, அந்த இசைக்கே அரசனாகி, தமிழர்கள் எல்லோரையும், தன் இசையால் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
அவர் தான், இசைஞானி என்ற பட்டம் பெற்ற பத்மஸ்ரீ இளையராஜா.
அவர் பிறந்து வாழ்ந்த வீட்டினை, அவர் 1977-ல் சினிமாவில் நுழைந்த பிறகு, 1980-ல் புதுப்பித்துக் கட்டி உள்ளார். இங்கு யாரும் தங்கவில்லை. மிக சாதாரணமாக, ஆனால் பெரிய அளவிலான இந்த வீட்டின், வெளியே உள்ள கிராதி கம்பிகளில் மட்டும், இசை வாத்தியங்கள், காணப் படுகின்றன.
வெகு சாதாரணமான இந்த ஊரில் இருந்து, இன்று உலகையே, தன் இசையால் வசப்படுத்திய அந்த இசை பிரம்மாவின், ஆரம்ப கால வாழ்வு நிலை, பிறந்த இடத்தைப் பார்க்கும் போது, வாழ்வில் பிடிப்பின்றி, தற்கொலை செய்ய எண்ணம் உள்ளவர்களுக்கு கூட நம்பிக்கை துளிர் விடும், என்பது மறுக்க முடியாத உண்மை!
English Summary
ilayaraja house in tamil nadu