மெட்ராஸ் எப்படி சென்னை ஆனது...? வரலாற்றை சொல்லும் பிரமாண்ட புகைப்படக் கண்காட்சி...! - Seithipunal
Seithipunal


387-வது மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு, சென்னையின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சென்னை முதல் மெட்ராஸ்” சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையின் பழமையான வரலாற்றையும், நகரின் தனித்துவமான பண்பாட்டு மரபுகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 387-வது மெட்ராஸ் தினக் கொண்டாட்டங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றன.

மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு புகைப்படப் போட்டி, கட்டுரைப் போட்டி, சுவர் ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும், செனட் ஹவுஸ், மெட்ராஸ் பல்கலைக்கழகம், சேப்பாக்கம் அரண்மனை, புனித ஜார்ஜ் கோட்டை, விக்டோரியா பொது மண்டபம், மெட்ராஸ் மெமோரியல் ஹால் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் பாரம்பரிய நடைப்பயணங்களும் நடைபெற்றன.

இதனுடன், “மெட்ராஸ் – முதல் சைக்கிள் பயணம்” என்ற நிகழ்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர் வி.ஸ்ரீராம் தொகுத்து வழங்கிய புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று நடைப்பயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் “சென்னை முதல் மெட்ராஸ்” என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டாக்டர் எல்.ராமச்சந்திரன், கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்த கறுப்பு-வெள்ளை புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு இந்தக் கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.

சென்னையின் பழமையான கட்டிடங்கள், வரலாற்றுச் சின்னங்கள், நகரின் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளை இந்தப் புகைப்படங்கள் கலைநயத்துடன் பதிவு செய்துள்ளன.

வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள், கலைச் சேகரிப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பார்வையிடலாம்.சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பின்னணி பாடகி மீனாட்சி இளையராஜா மற்றும் முத்து மண்ணிசை குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், அரவிந்த் கரகம் குழுவினரின் கரகாட்டம், குருநாதன் குழுவினரின் ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.“சென்னை முதல் மெட்ராஸ் வரை”, “சென்னையும் பாரதியும்” உள்ளிட்ட காணொளிகள் மற்றும் “மெட்ராஸ் வரலாற்றுத் தொடர்” ஆகியவையும் வெளியிடப்பட்டன.

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட காணொளிகளும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் உணவு, கலாச்சாரம் மற்றும் தனித்துவமான அடையாளங்களை உலக அளவில் அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “டேஸ்ட் ஆஃப் சென்னை” இலச்சினையும் வெளியிடப்பட்டது.

மேலும், சென்னையின் வரலாற்றை மையமாகக் கொண்டு காமிக் லைப்ரரி சார்பில் உருவாக்கப்பட்ட “தி லாஸ்ட் டிராம்” காமிக் புத்தகமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்த குழுக்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How did Madras become Chennai grand photo exhibition that tells history


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->