மருத்துவமனையிலேயே நடந்த பயங்கரம்...! சிகிச்சையில் இருந்த மனைவியை குத்தூசியால் குத்திக் கொன்ற கொடூரக் கணவன்...!
horrific incident took place hospital cruel husband stabbed his wife death needle while she undergoing treatment
திருச்சியில் குடும்பத் தகராறு கொடூர திருப்பம் எடுத்த நிலையில், ஏற்கனவே இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை, கணவன் மருத்துவமனைக்குள் புகுந்து மீண்டும் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தீரன்நகர் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் என்ற மூர்த்தி (40), மிளகுபாறை பகுதியில் உள்ள ஒரு பீடா கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கவிதா (36). இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தினமும் மதிய நேரத்தில் கணவருக்கு உணவு எடுத்துச் சென்று கொடுப்பது கவிதாவின் வழக்கமாக இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கவிதா வழக்கம்போல் உணவு கொண்டு செல்லாததுடன், அதுகுறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சம்பத்குமார், மாலை வேளையில் வீட்டிற்கு திரும்பினார்.வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் பலமுறை கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை.
இதனால் ஆவேசமடைந்த அவர், கதவை பலவந்தமாக உடைத்து உள்ளே நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து, கவிதாவின் உடலில் பலத்த காயம் ஏற்படும் வகையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பிறகு, தனது மாமியாரை செல்பேசியில் தொடர்புகொண்ட சம்பத்குமார், "கவிதாவை குத்திவிட்டேன்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதாவின் தாய் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்று, ரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மகளை மீட்டு உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மருத்துவமனையில் கவிதா சிகிச்சை பெற்று வருவதை அறிந்த சம்பத்குமார், அதே இரவு அங்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்த அவர், கவிதாவிடம் ஆவேசமாக பேசியதுடன், திடீரென பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் கூர்மையான குத்தூசியால் வயிறு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் மீண்டும் மீண்டும் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த எதிர்பாராத தாக்குதலில் கவிதா பலத்த ரத்தக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்குள் அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவம் அங்கிருந்த நோயாளிகள், உறவினர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உறையூர் காவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று, உயிரிழந்த கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், தப்பியோடிய சம்பத்குமாரை கைது செய்வதற்காக தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத் தகராறே இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமா அல்லது வேறு பின்னணி ஏதேனும் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
horrific incident took place hospital cruel husband stabbed his wife death needle while she undergoing treatment