கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கொடூர விபத்து...! ஓட்டுநர் உயிரிழப்பு, 9 பேர் படுகாயம்...!
Horrific bus accident Driver killed 9 injured
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏரலிலிருந்து தூத்துக்குடி வழியாக பசுவந்தனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தை, செய்துங்கநல்லூர் அருகிலுள்ள வில்லாகுளம் கிராமத்தை சேர்ந்த மணிமுத்து (55) இயக்கி வந்தார். நடத்துனராக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த சுரேஷ் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்த அந்த பேருந்து, தூத்துக்குடி–திருநெல்வேலி பிரதான சாலையில் மறவன்மடம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகத்தில் தாறுமாறாக சென்ற பேருந்து, சாலையோர மின்கம்பத்தையும் பின்னர் அருகிலிருந்த பனைமரத்தையும் மோதியது.
இதிலும் நின்றுவிடாமல் சுமார் 100 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட பேருந்து, இறுதியில் ஒரு கட்டிடத்தில் மோதிய பின்னரே நின்றது. இந்த கொடூர விபத்தில் டிரைவர் மணிமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது பரிதாபகரமானதாக உள்ளது.
மேலும் பேருந்தில் இருந்த பயணிகளில் 9 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.மேலும், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் புதுக்கோட்டை காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்து மீட்பு மற்றும் விசாரணை பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அதன் காரணங்களை கண்டறிய தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Horrific bus accident Driver killed 9 injured