கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியா...? - வட்டி குறைப்பில் நாளை RBI தீர்மானம்...!
Good news borrowers RBI decision interest rate cut tomorrow
வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களின் வட்டி விகிதமே ‘ரெப்போ ரேட்’ என அழைக்கப்படுகிறது. இந்த முக்கிய விகிதத்தை மாற்றுவது குறித்து, ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை நிதிக்கொள்கை குழு ஆலோசனை நடத்துவது வழக்கம்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பிப்ரவரி மாதத்தில் சில்லறை பணவீக்க விகிதம் 2.74 சதவீதத்தில் இருந்து 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டுமென மத்திய அரசு இந்திய ரிசர்வ் வங்கியை வலியுறுத்தியுள்ளது.

பணவீக்க நிலை மற்றும் பொருளாதார இயக்கங்களை கருத்தில் கொண்டு, வங்கிக் கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் வரை மொத்தமாக 1.25 சதவீதம் குறைக்கப்பட்டதால், தற்போதைய ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக நிலைத்து உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்திலும் இதே விகிதம் மாற்றமின்றி தொடர்ந்தது.இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை குழுவின் மூன்று நாள் முக்கிய கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது.
கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில், வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்து விரிவான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தின் இறுதி முடிவு நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது.மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் உருவாகியுள்ள பதற்றமான போர் சூழ்நிலை காரணமாக, பணவீக்கம் மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதனால் தற்போதைய 5.25 சதவீத ரெப்போ விகிதத்தில் மாற்றம் இருக்காது என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.முன்னதாக கடந்த ஆண்டு, வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 1 சதவீதத்திற்கும் மேல் குறைக்கப்பட்டிருந்தன.
தற்போது நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மீண்டும் வட்டி குறைப்பு அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு வங்கி வட்டாரங்களிலும் பொதுமக்களிடமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Good news borrowers RBI decision interest rate cut tomorrow