காஞ்சிபுரத்தில் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிப்பு...! 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு துர்க்கை சிலை கண்டெடுப்பு...!
Historical treasure discovered Kanchipuram 9th century Vishnu Durga idol discovered
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரியம்பாக்கம் கிராமம், சமீபத்திய கள ஆய்வின் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பால் கவனம் ஈர்த்துள்ளது. அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளர்கள், கிராமத்தின் வெளிப்புறத்தில் உள்ள குளக் கரையில் கவனிப்பாரற்று கிடந்த பெண் தெய்வ சிலையை கண்டுபிடித்து விரிவான ஆய்வு செய்துள்ளனர்.

ஆய்வில், அந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு சுமார் 80 செ.மீ. உயரமும் 42 செ.மீ. அகலமும் கொண்டதாகவும், கிழக்கு நோக்கி நின்ற நிலையில் அமைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது விஷ்ணு துர்க்கை உருவமாக இருப்பது உறுதியாகியுள்ளது. சிலை நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.
வலது முன்கை சேதமடைந்த நிலையிலும் அபய முத்திரையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது; பின்கையில் சக்கரம் காணப்பட்டது.இடது முன்கை இடுப்பில் அமைந்திருந்ததுடன், பின்கையில் சங்கும் தெளிவாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
மார்பு மற்றும் இடைப்பகுதிகளில் நுணுக்கமான செதுக்கல்களுடன் ஆடை அலங்காரம் இடம்பெற்றிருந்தது. தலையில் கிரீடம், கழுத்து, மார்பு, காதுகள், தோள்கள், கைகள் மற்றும் கால்களில் சிறப்பான அணிகலன்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
முகப்பகுதி சிறிதளவு மழுங்கியிருந்தாலும், கலைநயம் தெளிவாக வெளிப்பட்டது.இந்த சிலையில் கல்வெட்டு குறியீடுகள் எதுவும் காணப்படாத நிலையில், இது பல்லவர் ஆட்சிக்காலமான 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த வரலாற்றுப் பொருளின் உண்மைத்தன்மையை வரலாற்று ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் உறுதி செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Historical treasure discovered Kanchipuram 9th century Vishnu Durga idol discovered