''காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்க வேண்டும்'': உயர் நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை 18 மாதம் வரை பாதுகாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரை அலங்காநல்லூர் கல்லனை கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர்,  உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், '' மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக போலீஸார், எனது மனைவியை ஆக. 28-இல் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். எஸ்பி அலுவலகம் சென்று விசாரித்த போது உங்கள் மனைவியை அழைத்து வரவில்லை என்றனர். மறுநாள் ஒரு வழக்கில் மனைவியை சிறையில் அடைத்தனர்.

எனது மனைவியை 36 மணி நேரம் சட்டவிரோதமாக காவலில் வைத்து பின்னர் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே, மதுரை எஸ்பி அலுவலக சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.'' அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

குறித்த மனுவை விசாரித்த நீதிபதி முருகன் முன்பு, அரசு தரப்பில் கூறுகையில், ''மனுதாரரின் மனைவியை 29-ஆம் தேதி காலை குற்றப்பிரிவு போலீஸார் ஒரு வழக்கில் கைது செய்து உடனடியாக சிறையில் அடைத்தனர். எஸ்பி அலுவலக சிசிடிவி காட்சிகளை 15 நாட்கள் மட்டுமே சேமித்து வைக்க முடியும். சில சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளன. இந்த கேமராக்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டன. அதில் சில உடைந்துள்ளன.''என தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் நீதிபதி அளித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''மதுரை எஸ்பி அலுவலக வளாகம், மாவட்ட குற்றப்பிரிவு கட்டிடம் மற்றும் பிற கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆக. 28, 29-ஆம் தேதி பதிவான காட்சிகளை பாதுகாத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். எஸ்பி அலுவலகத்தில் எத்தனை கேமராக்கள் உள்ளன? அதில் எத்தனை கேமரா இயங்குகிறது? எத்தனை இயங்கவில்லை? அந்த கேமராக்கள் எப்போது இருந்து பழுதாக உள்ளது? என்பதை தெரிவிக்க வேண்டும்.

காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் 18 மாதங்கள் வரை பாதுகாக்க வேண்டும். 15 நாட்கள் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதை ஏற்க முடியாது. விசாரணை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது.'' என உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Court orders preservation of police station CCTV footage for up to 18 months


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->