சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு - துப்பாக்கிக் குண்டுடன் சிக்கிய கல்லூரி மாணவர்.!
gun bullet seized in chennai airport
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு - துப்பாக்கிக் குண்டுடன் சிக்கிய கல்லூரி மாணவர்.!
சென்னையில் உள்ள சாலிகிராமம் அருகே சின்மயா நகரை சேர்ந்தவர் கிஷோர். இவர் தனது மனைவி, மகன் கவுரியுடன் குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வருகிறார். இதில், கவுரி அமெரிக்காவில் பொறியியல் படித்து வருகிறார்.
இந்த நிலையில் கிஷோர் தனது தாயைப் பார்ப்பதற்காக, குடும்பத்துடன், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தார். இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் சிங்கப்பூர் நாட்டிற்கு சுற்றுலா செல்ல சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு பாதுகாப்பு அதிகாரிகள், உடைமைகளை சோதனை செய்த போது கிஷோரின் மகன் கவுரி சூட்கேசில் சைரன் ஒலித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், கவுரியின் சூட்கேஸை தனியே எடுத்து வைத்து திறந்து சோதனை செய்தனர்.
அதில் கவுரியின் சூட்கேசில் துப்பாக்கி குண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் கவுரியிடம் விசாரணை நடத்தினர்.
அதில், கவுரி, தான் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடும் பயிற்சி எடுத்து வருவதாகவும், அதற்காக அமெரிக்காவில் துப்பாக்கி லைசென்ஸ் எடுத்து, ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அதற்கு பயன்படுத்த வைத்திருந்த குண்டுகளில் ஒன்று, தவறுதலாக சூட்கேஸில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் அவருடைய சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிக் குண்டை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, கவுரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
gun bullet seized in chennai airport