திருவள்ளூரில் பெரும் சோகம்: கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதிய பைக்...! - தந்தையும் மகனும் துடிதுடித்து பலி
Great tragedy Thiruvallur Bike lost control and crashed electric pole Father and son died car accident
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கக்கன்ஜி காலனி 3-வது தெருவை சேர்ந்த சதீஷ் (34) என்பவர் கொத்தனாராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரஞ்சனி (28). இவர்களுக்கு சைலேஷ் (6), 9 மாத குழந்தை ஹரிஹரன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மேலும், உறவுப்பெண்ணான கீர்த்தனா (16) என்பவரும் அவர்களுடன் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்குன்றம் அருகே அலமாதியில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவில் ஐந்து பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மீஞ்சூரை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சோழவரம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சதீஷ் மற்றும் அவரது மகன் சைலேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரஞ்சனி, குழந்தை ஹரிஹரன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்குன்றம் போக்குவரத்து காவலர்கள், காயமடைந்த மூவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Great tragedy Thiruvallur Bike lost control and crashed electric pole Father and son died car accident