வேளாண் பட்ஜெட் தயாரிப்பு தீவிரம்: 10 அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் முக்கிய கருத்துக் கேட்பு கூட்டம்...!
Agriculture budget preparation full swing Important consultation meeting farmers led by 10 ministers
விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில், தமிழகத்தின் தனி வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு 5-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினம் 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் ஆகஸ்டு 6-ந்தேதி (வியாழக்கிழமை) வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.இந்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு துறையினரிடம் கருத்துகளை கேட்கும் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது.
வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஸ்ரீநாத், ராஜலட்சுமி, கமலி, விஜய் பாலாஜி, ரஞ்சித் குமார், மதன் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.மேலும், விவசாயிகள், முட்டை உற்பத்தியாளர்கள், கைத்தறித் துறையினர், வங்கி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் வினோத் தெரிவித்ததாவது,"இதுவரை 4 மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னை தவிர மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவர்களின் முக்கிய கோரிக்கைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் கருத்துகளையும் எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தனி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும்.
விவசாயிகள் முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் கவனமாக பரிசீலிக்கப்படும். குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் நெல் சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்தவும், அவற்றின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
விவசாயிகளின் உற்பத்தி அதிகரிப்பது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்க முடியாது. அவர்களின் வருமானமும் வாழ்வாதாரமும் உயர வேண்டும் என்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் விவசாயிகளுக்கும் உரிய முன்னுரிமை வழங்கப்படும்" என அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
English Summary
Agriculture budget preparation full swing Important consultation meeting farmers led by 10 ministers