'தமிழகத்தின் அனுமதி இல்லாமல் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது'...! - மேகதாது விவகாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி சவால்...!
Not even brick laid without Tamil Nadu permission Minister Sengottaiyan clearly explained
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசின் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.அப்போது அவர் குறிப்பிட்டதாவது,"தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, மக்களின் நலனையும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக, கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமரிடம் ஏற்கனவே கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகிய விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சபாநாயகர் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் உரிய விசாரணை நடத்தி, அடுத்தகட்ட முடிவை அறிவிப்பார்.நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது தமிழக மக்களின் நீண்டகால உணர்வுடன் தொடர்புடையது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதே முதல்-அமைச்சர் விஜயின் தெளிவான கொள்கை முடிவாகும்.
இந்த நிலைப்பாட்டில் அவர் எந்த மாற்றமும் இல்லாமல் உறுதியாக உள்ளார். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்தும் பிரதமரிடம் அவர் எடுத்துரைத்துள்ளார்.மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கப்படாது.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியாது. தமிழகத்தின் நலனுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் முதல்-அமைச்சர் விஜய் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.
தமிழக அரசின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பான விவரங்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. வரவுசெலவுத் திட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய அறிவிப்புகளும் மக்களுக்கு தெரியவரும்" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
English Summary
Not even brick laid without Tamil Nadu permission Minister Sengottaiyan clearly explained