பிரசித்தி பெற்ற கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்த ஆளுநர்!
governor RN Ravi visit Thirumundeeswaram temple
விழுப்புரம், திருவெண்ணைநல்லூர் திருமுண்டீச்சரம் பகுதியில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற செல்வாம்பிகை உடனுறை ஸ்ரீ சிவலோகநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவில் அப்பரால் பாடல் பெற்ற தலமாகும். இந்த கோவில் கி.பி. 943 இல் வெள்ளாங்குமரன் மன்னரால் கருங்கற்களால் கட்டப்பட்டது.
வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்று உறுப்பை தந்தார். இதனால் இங்குள்ள கல்வெட்டில் பொற்களம் கொடுத்த நாயனார் என்றும் ஆற்றுத்தழி மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றார்.
இந்த கோவில் தொன்மைக்கும் பழமைக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றது. இந்த கோவிலை காண்பதற்காக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை கோவிலுக்கு சென்றார்.
ஸ்ரீ சிவலோகநாதர் செல்வாம்பிகையை தரிசித்த ஆளுநர் ஆர். என். ரவி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த போது கோவில் பிரகார கருங்கல் சுவர்கள் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக ஆளுநரிடம், தொல்லியல் துறை ஆய்வாளர் ராஜா எடுத்துரைத்தார். இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடுகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட காவலர்களும் செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர். என். ரவி கல்வெட்டு ஆய்வுகளை நிறைவு செய்துவிட்டு அங்கிருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு சென்றார்.
English Summary
governor RN Ravi visit Thirumundeeswaram temple