திருப்பத்தூரில் அரசு கட்டுப்பாட்டில் இருந்த ரூ.50 லட்சம் செம்மரங்கள் களவு...! - 5 வனத்துறையினர் அதிரடி பணிநீக்கம்...!
Government controlled redwoods worth 50 lakh stolen Tirupattur 5 forest officials suspended
திருப்பத்தூரில் அரசு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 55 செம்மரக்கட்டைகள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, 5 வனத்துறை அலுவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூரில் தமிழ்நாடு வனத்துறைக்குச் சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு செயல்பட்டு வருகிறது. பல்வேறு செம்மரக் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் செம்மரக்கட்டைகள் இங்கு பாதுகாப்பாக வைக்கப்படுவது வழக்கம்.அந்த வகையில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 55 செம்மரக்கட்டைகள் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 1,750 கிலோ எடை கொண்ட இந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் என தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி கிடங்கில் இருந்த செம்மரக்கட்டைகள் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றைப்பூட்டு அலுவலர் என்.ஜோதிலிங்கம், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து, காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி 5 வனத்துறை அலுவலர்களை திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் எம்.மகேந்திரன் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ஒற்றைப்பூட்டு அலுவலர் என்.ஜோதிலிங்கம், வனக்காப்பாளர்கள் ஆர்.மோகன்குமார், பி.ராமமூர்த்தி, சி.ரேணு மற்றும் வனவர் பி.பரமகுரு ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செம்மரக்கட்டைகள் மாயமான விவகாரம் தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Government controlled redwoods worth 50 lakh stolen Tirupattur 5 forest officials suspended