வேலை தேடும் இளைஞர்களுக்கு நற்செய்தி...! ரூ.9,470 கோடி முதலீட்டில் கடல் உணவு ஏற்றுமதி மண்டலம்...! - 1.5 லட்சம் பேருக்கு வாழ்வாதாரம்...!
Good news job seeking youth Seafood Export Zone investment 9470 crore Livelihood 1point5 lakh people
தமிழகத்தின் கடலோர பொருளாதார வளர்ச்சிக்கு புதிய திருப்புமுனையாக, ரூ.9,470 கோடி முதலீட்டில் மிகப்பெரிய கடல் உணவு ஏற்றுமதி மண்டலங்கள் உருவாக உள்ளன. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மாநிலத்தின் ஏற்றுமதி திறன் பல மடங்கு உயர்வதுடன் சுமார் 1.5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவிலேயே முதல்முறையாக, மீன்கள் மற்றும் கடல் சார்ந்த உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கென பிரத்யேக சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கும் முன்னெடுப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, கடல் உணவு துறையில் தமிழகத்தை தேசிய அளவில் முன்னணி மாநிலமாக மாற்றும் என பார்க்கப்படுகிறது.இந்த திட்டத்திற்காக திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 முக்கிய கடலோர மாவட்டங்களில் மொத்தம் 2,500 ஏக்கர் உப்பள நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது உப்பள ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலங்களை, சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலமான மெப்ஸ் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறைக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த 5 மண்டலங்களிலும் நவீன மீன் உணவு தயாரிப்பு ஆலைகள், பதப்படுத்தும் மையங்கள், அதிநவீன குளிர்பதன கிடங்குகள், பேக்கேஜிங் மையங்கள் மற்றும் ஏற்றுமதிக்கான விரைவு போக்குவரத்து வசதிகள் ஒருங்கிணைந்த முறையில் அமைக்கப்பட உள்ளன.இந்த மிகப்பெரிய திட்டத்தின் மூலம் ரூ.9,470 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக சுமார் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடலோர பகுதிகளில் வாழும் இளைஞர்கள் மற்றும் மீனவர் சமூகங்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக அமையும் என கருதப்படுகிறது.
மேலும், இந்த மண்டலங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் திறன் உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த திட்டம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியிலும், கடல் உணவு ஏற்றுமதி துறையிலும் புதிய வரலாற்றை படைக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Good news job seeking youth Seafood Export Zone investment 9470 crore Livelihood 1point5 lakh people