இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்கும் இந்த மரணக் குழிகள்....? - ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி...!
How many more lives will these death pits claim boy died after falling borewell Haryana
ஹரியானா மாநிலத்தில் மனதை பதறவைக்கும் சோக சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள தனோரா கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ஜித். விவசாயியான இவர், தனது 4 வயது மகன் நிர்வேர் சிங்கை அழைத்துக்கொண்டு நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு மன்ஜித் தோட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் நிர்வேர் சிங் அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், அருகில் பாதுகாப்பின்றி திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றின் அருகே சென்ற சிறுவன், எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை மன்ஜித் ஓடிச்சென்று பார்த்தபோது, மகன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்திருப்பதை கண்டு பதறிப் போனார்.உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
சுமார் 220 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவனை மீட்பது மிகுந்த சவாலாக மாறியது. உள்ளூர் மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், காலை 7.30 மணியளவில் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினர், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் நீடித்த பதற்றமான மீட்புப் பணிகள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தின.சுமார் 21 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இன்று அதிகாலை 3.40 மணியளவில் சிறுவன் நிர்வேர் சிங் மீட்கப்பட்டான்.
ஆனால் மீட்கப்பட்டபோது குழந்தைக்கு சுயநினைவு இல்லாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்த துயர சம்பவம் தனோரா கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஆழ்துளை கிணற்றை திறந்த நிலையில் விட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
How many more lives will these death pits claim boy died after falling borewell Haryana