முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டத்தை சந்தித்த ‘பாகுபலி’!கதறி அழுத ராஜமௌலி! கருப்பு பக்கங்களை பகிர்ந்த ராஜமௌலி
Baahubali suffered a loss of 70 crore on the very first day Rajamouli wept bitterly Rajamouli shares the dark chapters
சென்னை: இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘பாகுபலி’, வெளியான முதல் நாளிலேயே கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்ததாக இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தெரிவித்துள்ளார். இந்த தகவலை, சமீபத்தில் வெளியான ‘Baahubali: The Torchbearer’ ஆவணப்படத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்தக் காலகட்டத்தில் ரூ.150 முதல் ரூ.200 கோடி வரை செலவில் உருவான ‘பாகுபலி’ திரைப்படம், இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் அதிக செலவுகள் ஏற்பட்டதால், அடுத்தகட்ட பணிகளுக்கான நிதியை ஏற்பாடு செய்வது தயாரிப்புக் குழுவுக்கு பெரும் சவாலாக இருந்ததாக ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளுக்காக கோடிக்கணக்கில் செலவிடப்பட்டதால், தயாரிப்பாளர்கள் கடும் நிதி அழுத்தத்தை எதிர்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
படம் வெளியான முதல் நாளில் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை என்றும், அந்த நேரத்தில் சுமார் ரூ.70 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் ராஜமௌலி தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் வசூல் குறித்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகாததுடன், சமூக வலைதளங்களில் வெளியான எதிர்மறை விமர்சனங்களும் படக்குழுவை கவலையடையச் செய்ததாக அவர் கூறியுள்ளார். அந்தச் சூழலில் நடிகர் பிரபாஸும் மனஉளைச்சலில் இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
இந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில், படத்தை தென்னிந்திய மொழிகளுக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் பிற மொழிகளிலும், வெளிநாடுகளிலும் பரவலாக வெளியிட முடிவு செய்ததாக ராஜமௌலி தெரிவித்துள்ளார். அந்த முடிவு திரைப்படத்தின் வரவேற்பை அதிகரித்ததோடு, வசூலிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, ‘பாகுபலி: தி பிகினிங்’ உலகம் முழுவதும் சுமார் ரூ.650 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து வெளியான ‘பாகுபலி 2: தி கன்க்ளூஷன்’ உலகளவில் ரூ.1,750 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி, இந்திய சினிமாவின் வரலாற்று சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது.
ஒரு திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே அதன் வெற்றியை தீர்மானிப்பதில்லை என்பதற்கு ‘பாகுபலி’ சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக திரையுலகினர் குறிப்பிடுகின்றனர்.
English Summary
Baahubali suffered a loss of 70 crore on the very first day Rajamouli wept bitterly Rajamouli shares the dark chapters