அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க மறுக்கும் பெற்றோர்!காரணம் இதுதான்! முதலில் இத பண்ணுங்க- ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்
Parents refusing to enroll children in government schools Here is the reason Do this first urges Sridhar Vembu
சென்னை: தமிழகத்தில் தற்போது சுமார் 50 சதவீத பள்ளி மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று வருவதாகவும், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதே இதற்கான முக்கிய காரணம் என்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர் நியமனத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, அண்மைக் காலமாக தமிழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகம் தொடர்பான பல்வேறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். முன்னதாக, பள்ளிகளுக்கான உரிமம் பெறுவதிலும் லஞ்சம் கேட்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறைந்துள்ளதாக பெற்றோர்கள் கருதுவதால், பொருளாதார வசதி இல்லாத குடும்பங்கள்கூட கடன் வாங்கி தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளின் தரம் பாதிக்கப்படுவதற்கு ஆசிரியர் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளே முக்கிய காரணமாக இருப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். பல ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களைப் பெறுவதற்கு லஞ்சம் வழங்க வேண்டிய நிலை இருந்ததாக சிலர் தன்னிடம் தெரிவித்ததாகவும், இத்தகைய நடைமுறைகள் தகுதியான ஆசிரியர்கள் பணியில் சேர்வதைத் தடுத்து, கல்வி அமைப்பையே பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் அரசின் நிதியுதவி பெறும் பள்ளியில் கல்வி கற்றவர் என்பதால், அரசுப் பள்ளிகள் வலுப்பெற வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவும், தனது நிறுவனம் சார்பில் இலவச தனியார் பள்ளிகள் நடத்தப்பட்டு வருவதோடு, அவற்றை மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் தற்போது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பல ஆசிரியர்கள் இருப்பதாகவும், அவர்களை ஊக்குவித்து கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஆசிரியர் நியமன முறையை வெளிப்படையாகவும், முறையாகவும் சீரமைக்க வேண்டும் என்றும், சில பகுதிகளில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு சிறப்பாக இருந்தாலும், சில இடங்களில் மேம்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் ஏழை மற்றும் எளிய மக்களின் குழந்தைகளுக்கு தரமான இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், இதுதொடர்பான தனது பதிவில் தமிழக முதலமைச்சரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Parents refusing to enroll children in government schools Here is the reason Do this first urges Sridhar Vembu