நூல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


ஜவுளி தொழிலை பாதுகாக்க, பருத்தி மற்றும் நூல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மத்திய அரசு, பாதிப்பில் இருக்கும் ஜவுளித்தொழிலைப் பாதுகாக்க, பருத்தி, நூல் விலை உயர்வைக் குறைக்க, ஜவுளித் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் தொழிலாளர் நலன் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் முக்கியத் தொழிலான ஜவுளித்தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பருத்தி, நூல் விலை அதிகமாக உயர்ந்து வருவதால் ஜவுளித் தொழில் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மே முதல் வாரத்தில் ஒரு கிலோ நூலின் விலை ரூ. 441 க்கு விற்கப்பட்டு, தற்போது ரு. 481 க்கு விற்கப்படுகிறது. 

நூல்களில் விலை 100 சதவீதம் உயர்ந்திருப்பதால் ஜவுளித்தொழில் சரிவர நடைபெறாமல் இத்தொழில் சம்பந்தமாக ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. சுமார் 10 இலட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

தொடர்ந்து பருத்தி, நூல் விலையானது மிக அதிக அளவில் உயர்த்தப்படுவதால் ஜவுளித் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது. 

அதாவது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பருத்தி ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும், பருத்தியை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் கொண்டு வரவேண்டும், செயற்கையாகப் பருத்தியை பதுக்கி வைக்கும் முயற்சியை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

தொழில் நிறுவனங்களின் வேலை நிறுத்தத்தால் திருப்பூரில் மட்டுமே சுமார் ரூ.360 கோடி ரூபாய் வர்த்தகம் இழப்பு ஏற்படும் நிலை உருவாகும் என தெரிவிக்கின்றனர். 

 நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோவை, ஈரோடு, கரூர், சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் ஜவுளித்துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் ஏறக்குறைய 100 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். 

நாளுக்கு நாள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க, பருத்தி, நூல் விலையைக் குறைக்க, உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நலன் காக்க சலுகைகளை வழங்கவும், சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்தவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.

எனவே மத்திய அரசு, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVASAN statement on cotton yarn price increased


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->