கார் மற்றும் மினி லாரியில் கஞ்சா கடத்தல்...! 44 கிலோ கஞ்சா பறிமுதல் - 8 பேர் கைது...!
Ganja Smuggling Car and Mini Truck 44 kg Ganja Seized 8 Arrested
தமிழகத்திற்கு கார் மற்றும் மினி லாரியில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சாவைத் திருவள்ளூர் காவலர்கள் பறிமுதல் செய்து, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், டிஎஸ்பி தமிழரசி தலைமையில் மப்பேடு காவலர்கள் கண்ணூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த காரை நிறுத்திச் சோதனை செய்ததில், சுமார் 6 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. காரில் வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் (29), மாதேஷ் (24), டோனி கவுதம் (23) ஆகிய மூவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர்களுக்குப் பின்னால் வந்த மினி லாரியிலும் கஞ்சா கடத்தி வரப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மினி லாரியைச் சோதனை செய்தபோது, முந்திரி கழிவு மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சாவை காவலர்கள் மீட்டனர். இதனை வேலூரைச் சேர்ந்த அருண் பாண்டியன் (26) மற்றும் லோகேஷ் (29) ஆகியோர் கடத்தி வந்துள்ளனர்.
இவர்கள் ஒடிசாவிலிருந்து ரயில் மூலம் ஆந்திராவிற்கு கஞ்சாவைக் கொண்டு வந்து, அங்கிருந்து கார் மற்றும் மினி லாரி மூலம் கடத்தியது விசாரணையில் உறுதியானது. அவர்களிடமிருந்து மொத்தம் 27 கிலோ கஞ்சா, ஒரு கார், ஒரு மினி லாரி மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் சென்னை அம்பத்தூர் - ஒரகடம் பகுதியில் காவலர்கள் நடத்திய ரோந்துப் பணியில், ஆவடி சிந்து நகரைச் சேர்ந்த மகேஷ் (23) மற்றும் பட்டாபிராம் அண்ணா நகரைச் சேர்ந்த அஜய் குமார் (19) ஆகியோரின் கைப் பைகளைச் சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா சிக்கியது.
இவர்கள் திருப்பதியிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அம்பத்தூர் - சண்முகபுரம் புழல் ஏரிக்கரை பகுதியில் 7 கிலோ கஞ்சாவை விற்க முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த நரசிம்மன் (29) என்பவரையும் காவலர்கள் கைது செய்தனர். சென்னையில் மட்டும் நேற்று மொத்தம் 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
English Summary
Ganja Smuggling Car and Mini Truck 44 kg Ganja Seized 8 Arrested