அசல் கருப்பட்டியில் கலப்பட மோசடி...! - உடன்குடி வியாபாரிகளுக்கு ரூ.38 கோடி அபராதம்...!
Fraud involving adulteration original blackjaggery 38 crore fine Udankudi traders
பாரம்பரியத்தின் அடையாளமாகவும், இயற்கை இனிப்பின் சிறப்புமிக்க தயாரிப்பாகவும் விளங்கும் உடன்குடி கருப்பட்டியில் நடைபெற்றதாகக் கூறப்படும் மிகப்பெரிய வரி ஏய்ப்பு மற்றும் கலப்பட மோசடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசல் பனை கருப்பட்டி என்ற பெயரில் சீனி கலந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக நடைபெற்ற விசாரணையில் அம்பலமானதைத் தொடர்ந்து, 5 வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.'கற்பகத்தரு' என்று போற்றப்படும் பனை மரத்தில் இருந்து பெறப்படும் பதநீரை பாரம்பரிய முறையில் காய்ச்சி தயாரிக்கப்படும் கருப்பட்டி, உடல்நலத்திற்கு உகந்த இயற்கை உணவுப் பொருளாக மதிக்கப்படுகிறது.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு (ஜி.ஐ.) அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அதன் தரத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் தனி மதிப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பனைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு கருப்பட்டி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு வழங்கியுள்ளது. இருப்பினும், பொதியிட்டு கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும் கருப்பட்டிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது.
அதேவேளையில், பதநீருடன் 75 சதவீதத்திற்கும் அதிகமாக சீனி கலந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு போன்ற பொருட்கள் இயற்கை தயாரிப்பாக கருதப்படாது. எனவே அவற்றுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. கட்டாயமாக விதிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த விதிமுறையை மீறி சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உடன்குடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் சீனி மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் கடந்த சில வாரங்களிலேயே சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான சீனி கொள்முதல் செய்யப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பதநீருடன் அதிகளவில் சீனி கலந்து கருப்பட்டி தயாரிக்கப்பட்டு, அதை "அசல் உடன்குடி பனை கருப்பட்டி" எனக் குறிப்பிட்டு சந்தையில் விற்பனை செய்ததன் மூலம் சுமார் ரூ.6 கோடி வரையிலான வர்த்தகம் நடைபெற்றது தெரிவிக்கப்பட்டது.
இந்த முறைகேட்டின் மூலம் அதிக வரி செலுத்த வேண்டிய பொருட்களுக்கு குறைந்த வரி மட்டும் செலுத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டதும் உறுதியானது.மேலும், பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரை சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கும், இயற்கை கருப்பட்டிக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. மட்டுமே செலுத்தப்பட்டிருந்தது.
உண்மையில் அந்தப் பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட வேண்டிய நிலையில், தவறான வகைப்படுத்தலின் மூலம் வரி ஏய்ப்பு நடைபெற்றது தெரிவிக்கப்பட்டது.கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த முறைகேடு தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருப்பது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உடன்குடியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தமாக ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தெரிவித்தனர். பாரம்பரிய சிறப்புமிக்க உடன்குடி கருப்பட்டியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த இந்த கலப்பட மற்றும் வரி ஏய்ப்பு விவகாரம், வணிக வட்டாரங்கள் மட்டுமின்றி பனைத் தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Fraud involving adulteration original blackjaggery 38 crore fine Udankudi traders