புதிய ஆறு வழி சாலை அமைத்தல் பணி.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
Formation of New Six Lane Road Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated the event
திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை 2,689.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30.10 கி.மீட்டர் நீளத்திற்கு கடினப்புருவத்துடன் கூடிய புதிய ஆறு வழி சாலை மற்றும் சாலையின் இருபுறமும் இரு வழித்தடத்தை கொண்ட சேவைச் சாலை அமைத்தல் பணிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் எண்ணூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையவும், கனரக வாகன போக்குவரத்தால் ஏற்படும் நெருக்கடியை குறைப்பதற்கும், வணிக மற்றும் தொழில் வளங்களை அதிகரிக்கவும் சென்னை எல்லை சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மகாபலிபுரம் வரை 132.87 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது.
சென்னை எல்லை சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக,பிரிவு – 3 ன் கீழ் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை 30.10 கி.மீ நீளத்திற்கு புதிய ஆறு வழி சாலை மற்றும் இருவழி சேவை சாலை (இருபுறமும்) அமைக்க மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு,திருவள்ளூர் புறவழிச்சாலையில் இருந்து வெங்காத்தூர் வரை 10.40 கி.மீ நீளத்திற்கான சாலைப் பணிகள் 1,133.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,வெங்காத்தூர் முதல் செங்காடு வரை 10.00 கி.மீ நீளத்திற்கான சாலைப்பணிகள் 593.27 கோடி ரூபாய் மதிப்பீட்டுலும், செங்காடு முதல் திருப்பெரும்புதூர் வரை 9.70 கி.மீ நீளத்திற்கான சாலைப்பணிகள் 963.27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 30.10 கி.மீட்டர் சாலை பணிகள் 2,689.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பணியில், 2 உயர்மட்ட மேம்பாலங்கள், 1 ரயில்வே மேம்பாலம் மற்றும் 2 பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.மேலும் சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு-1 ன் கீழ் எண்ணுார் துறைமுகத்தில் துவங்கி தச்சூர் வரை 2,122.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்தப்படுகிறது. பிரிவு-1 ன் கீழ் தற்போது வரை 35 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு-2ன்கீழ்தச்சூரில் தொடங்கி திருவள்ளூர் புறவழிச்சாலை வரை 1,539.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்தப்படுகிறது. பிரிவு-2 ன் கீழ் தற்போது வரை 68 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
இதில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.இராஜேந்திரன், எஸ்.சந்திரன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் டாக்டர்.இரா.செல்வராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் எஸ்.பழனிவேல் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Formation of New Six Lane Road Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated the event