ஐந்து ரூபாய்க்கு பாடசாலை - எங்குத் தெரியுமா?
five rupees school to student at sivakasi
ஐந்து ரூபாய்க்கு பாடசாலை - எங்குத் தெரியுமா?
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காளிராஜ், சுரேஷ்பாபு உள்ளிட்ட இருவர், தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ‘கற்போம் - கற்பிப்போம்’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, "ரைட் கிளப் பார் எஜுகேஷன்" என்ற அமைப்பைத் தொடங்கினர்.
இந்த அமைப்பு சார்பில், ஏழை மாணவர்களுக்கு கல்வி மற்றும் கலைகளை கற்றுத் தரும் விதமாக மாதம் ரூ.5 கட்டணத்தில் பாட சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பாட சாலையில் வாரத்தில் ஐந்து நாட்கள் வகுப்பறை கல்வியும், வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கல்வியும் அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஹிந்தி, ஆங்கில பேச்சு பயிற்சி, கணினி வகுப்பு, ஓவியம், சிலம்பம், அம்பு எய்தல் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார விளையாட்டுகளும் கற்றுத் தரப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, இந்த அமைப்பு சார்பில் பெற்றோரை இழந்து வறுமையால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத 43 மாணவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பினர் மாணவர்களுக்கு கல்விக் கற்றுத் தருவது மட்டுமல்லாமல், சமூக சேவையையும் செய்து வருகின்றனர். மேலும், தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம், மாரத்தான், ஓவியக் கண்காட்சி, பாரம்பரிய உணவுத் திருவிழா, மாறுவேடப் போட்டி மற்றும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றும் 15 ஆசிரியர்களை கண்டறிந்து ஆசிரியர் தினத்தில் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தன்னார்வ ஆசிரியர்கள் தெரிவித்ததாவது:- "நாங்கள் படித்ததை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க 5 ரூபாய் பாடசாலையில் மாலை நேர வகுப்பு எடுத்து வந்தோம். அப்போது மாணவர்களிடம் இருந்த ஆர்வத்தினால் முழு நேரமாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பாடசாலையில், கல்வி மட்டுமல்லாமல் எங்களுக்கு தெரிந்த பிற கலைகளையும் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
five rupees school to student at sivakasi