பரபரப்பு! கிணற்றில் விழுந்த பெண் காட்டு யானை...3 மணி நேர போராட்டம்! - உயிருடன் மீட்டார்களா...? - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் மாதம்பட்டி அருகே உள்ள குப்பனூர் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக வன எல்லையைத் தாண்டி வந்த வயதான பெண் காட்டு யானை, விவசாயிகளின் நிம்மதியை கலங்கடித்து வந்தது. விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நசுக்கிய அந்த யானை, நேற்று அதிகாலை குடியிருப்புகளை ஒட்டியுள்ள கே.ஆர்.எஸ். கால்வாய் பகுதியை நோக்கி வந்தது.

இந்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீப்பில் சென்றபடி யானையை வனப்பகுதி நோக்கி திருப்ப முயன்றனர். வயதின் காரணமாக வேகமாக நகர இயலாத அந்த யானை மெதுவாக நடந்து சென்றது.

அந்தச் சமயத்தில் அருகிலிருந்த ஒரு தோட்டம் வழியாக சென்றபோது, அங்கு பாதியாக மூடப்பட்டிருந்த பழைய கிணறு பேராபத்தாக மாறியது.

மேலும்,கிணற்றை மூட மண் மற்றும் குப்பைகளால் நிரப்பி வைத்திருந்த நிலையில், இன்னும் சில அடிகள் ஆழம் மீதமிருந்தது. சேறும் சகதியுமாக மாறிய அந்த பள்ளத்தை கடக்க முயன்ற யானை, அச்சமயத்தில் தவறி அதில் சிக்கிக் கொண்டது. நான்கு கால்களும் சேற்றுக்குள் புதைந்ததால் வெளியே வர முடியாமல் தத்தளித்தது.

மீண்டு வர கடுமையாக முயன்றும் பலனின்றி, வலியால் பிளிறி, சோர்வடைந்து சேற்றிலேயே படுத்துக்கொண்டது.இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு சென்றதும், உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

மூன்று பொக்லைன் எந்திரங்கள் மற்றும் சிறிய கிரேன் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி, பரபரப்பான சூழலில் தொடர்ந்தது. யானையை சுற்றியிருந்த சேற்றை எந்திரங்கள் மூலம் அகற்றிய வனத்துறையினர், மூன்று மணி நேரம் தொடர்ந்து போராடி இறுதியில் அந்த யானையை பள்ளத்தில் இருந்து உயிருடன் மீட்டனர்.

தொடர்ந்து மூன்று மணி நேரம் சேற்றில் தத்தளித்ததால் அந்த யானை கடும் சோர்வுடன் காணப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்து, உணவு மற்றும் குளுக்கோஸ் வழங்கினர்.

இருந்தாலும் அது எழுந்து நிற்க முடியாமல் தவித்தது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் யானையின் வயிற்றுப் பகுதியில் பெல்ட் கட்டி மெதுவாக தூக்கி நிறுத்தினர்.

தற்போது அந்த யானையை சாடிவயல் முகாமுக்கு கொண்டு செல்லலாமா, அல்லது மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடலாமா என்ற விவகாரத்தில் வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் அனைவரின் கவனமும், அந்த வயதான யானையின் நலனையே சுற்றி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

female wild elephant fell into well 3 hour struggle Were they able rescue her alive


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->