விவசாய தொழிலாளர்கள் போராட்டம்..கோரிக்கைகளை கோஷம் எழுப்பி வலியுறுத்தல்!
Farm workers protest demands strongly reiterated with slogans
திருவள்ளூரில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவி,செந்தில், சிவகுமார், சரளா, ஜெயசந்திரன்,அருள்,முருகன்,எட்வின் ஏழுமலை,ரவிகுமார், நக்கீரன், கதிர்வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மின் இணைப்பு, வீட்டு வரி, பட்டா வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனையை கிரைய பதிவு செய்து வந்த தொகையை கோவில் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். நத்தம் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு விடுபட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
ஏற்கனவே குடிமனை பட்டா வழங்கிய பயனாளிகளுக்கு மனையை அளந்து, பட்டாவை கிராம கணக்கில் ஏற்றி, கம்ப்யூட்டர் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஏற்கனவே குடிமனை பட்டா தந்தவர்களுக்கு இதுவரை மனையை காட்டாமல், பதிவேற்றம் செய்யாமல் தற்போது பட்டாவை ரத்து செய்வதை நிறுத்த வேண்டும். நீர்நிலைகளில் வசிப்போருக்கு கள தன்மையை ஆய்வு செய்து வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் தர வேண்டும். பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை அகற்றி உண்மை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கோதண்டம், பெருமாள்,அப்சல் அஹம்மத், கங்காதரன், கண்ணன்,தமிழரசன், எல்லைய்யன், கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன்,வேம்புலி,தவமணி, சேகர்,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Farm workers protest demands strongly reiterated with slogans