ஜாமீனில் வந்து எஸ்கேப்...கடைசியில் துப்பாக்கி முனையில் சரணடைந்த பிரபல ரவுடி சுதாகர்...!
Famous rowdy Sudhakar who escaped after being released on bail finally surrendered gunpoint
சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (37) மீது 3 கொலை வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிரபல ரவுடி அரும்பாக்கம் ராதாவின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் சுதாகர், சில வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பிணையில் வெளியே வந்த பின்னர், நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு காவலர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுதாகர் ரகசியமாக பதுங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கு விரைந்த காவலர்கள், வீட்டை முழுமையாக முற்றுகையிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
தன்னைச் சுற்றி வளைத்திருப்பதை உணர்ந்த சுதாகர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், கணநேரத்தில் செயல்பட்ட காவலர்கள், துப்பாக்கி முனையில் அவரை மடக்கிப் பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுதாகர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவரை சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை அரும்பாக்கம் காவலர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Famous rowdy Sudhakar who escaped after being released on bail finally surrendered gunpoint