முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.பி.!!
ex mp maithreyan joined dmk
சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான மருத்துவர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து 1999-ம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்தார்.
கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்தார். தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலையடுத்து மைத்ரேயன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்பட்டார். இதனால், அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார்.
அதன் பின்னர் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தித்தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார்.
தொடர்ந்து மைத்ரேயன் கடந்த 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி அவர் முன்னிலையில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு திமுக உறுப்பினர் அட்டையை முதலமைச்சர் வழங்கினார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் மைத்ரேயன் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
ex mp maithreyan joined dmk