ஆசிரியர் தகுதித் தேர்வை மாற்றி வைக்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்.!!
eps request trb exam date change
நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நேற்று முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் [http://trb.tn.gov.in] (http://trb.tn.gov.in) வழியாக மட்டுமே ஏற்கப்படும் என்றது தெரிவித்தது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

"நவம்பர் 1,2 உள்ளிட்ட தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது. ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா?.
முதலமைச்சரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
eps request trb exam date change