2026-இல் ஏழாவது முறையாக கழக ஆட்சி அமைவது உறுதி - தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்! - Seithipunal
Seithipunal


திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ""ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உள்ளது.

S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாகத் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் அதே குறுக்குவழியைப் பின்பற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தியா கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாகத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டு வெற்றி பெறலாம் எனப் போடுகின்ற கணக்கு என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்புக்கணக்காகத்தான் ஆகும்.

S.I.R. முறையைக் கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை தி.மு.கழகத்திற்கு உண்டு.

'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்த இயக்கம்தான் தி.மு.கழகம். நான்காண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிலும் எடுத்துச் சொல்லி, கழக அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் என்னென்ன பயன்களைப் பெற்றுள்ளன என்பதை உறுதி செய்து, தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் துரோகத்தையும் மீறி - மாநில அரசின் திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றி - தமிழ்நாடு தலைகுனியாது என்பதை நிலைநாட்டி, மாநில உரிமைகளுக்காகப் போராடும் தி.மு.க. அரசு தொடர்ந்திட- மக்களின் ஆதரவைப் பெற்று, இரண்டரை கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைத்தவர்கள் கழகத்தின் ரத்தநாளங்களான உடன்பிறப்புகள். அதற்காக என் மனமார்ந்த நன்றியை அப்போதும் தெரிவித்தேன். இப்போது மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். களத்தில் நமக்கான பணிகள் முடிவடையவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது.

என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில் செயல்படுத்துவதற்காக, 28-10-2025 அன்று காலையில் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் பயிற்சிக் கூட்டம் நடத்தப்படவிருக்கிறது.

'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' என்ற இலக்குடன் கழக உடன்பிறப்புகள் களப்பணியாற்றுவதற்கான இந்தப் பயிற்சிக் கூட்டம், முதன்மை உடன்பிறப்பான, உங்களில் ஒருவனான எனது தலைமையில் நடைபெறுகிறது. கழகப் பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகிக்கும் இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் கழக மாவட்டச் செயலாளர்கள், கழகத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர – ஒன்றிய – நகர – பகுதி -பேரூர்க் கழகச் செயலாளர்கள் பங்கேற்றுப் பயிற்சி பெற இருக்கிறார்கள்.

இந்தப் பயிற்சிக்கூட்டத்திற்குப் பிறகு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பாக முகவர்கள், பாக உறுப்பினர்கள் குழு, பாக டிஜிட்டல் ஏஜென்ட், பாக இளைஞரணி, பாக மகளிரணி, பாகத்திற்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' என்பதை முன்னெடுக்க வேண்டும். மாநில நிர்வாகியாக இருந்தாலும் கூட அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும்.

மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R. செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கழகத்தினர் கடமையாற்ற வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும்தான்.

என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என ஒவ்வொரு கழக உடன்பிறப்பும், உறுதியேற்று, களப்பணியாற்றினால், எல்லா வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-இல் ஏழாவது முறையாக கழக ஆட்சி அமைவது உறுதியாகிவிடும். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனியாது. தலைகுனிய விடமாட்டார்கள் கழக உடன்பிறப்புகள். அந்த நம்பிக்கையுடனும் உறுதியுடனும்தான் மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சிக் கூட்டத்தில் உங்களைச் சந்திக்க வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election commission DMK mk stalin 


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->