ஓபிசி கிரீமிலேயர் வரம்பு போதுமானது என்பதா? மத்திய அரசின் முடிவால் அதிர்ச்சியில் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர் வருமான வரம்பை இப்போதுள்ள ரூ. 8 லட்சம் என்ற அளவிலிருந்து உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாவிற்கு விடையளித்த மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திரகுமார், ‘‘பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை  பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பு இப்போது ஆண்டுக்கு ரூ.8 லட்சமாக உள்ளது. இதுவே போதுமானது என்று மத்திய அரசு கருதுகிறது. இது தொடர்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து எந்த பரிந்துரையும் கோரப்படவில்லை’’ என்று கூறினார். மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.

விவசாயம், ஊதியம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் வருமானம் இல்லாமல் பிற ஆதாரங்களில் இருந்து ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுபவர்கள் கிரீமிலேயர் எனப்படும் வசதி படைத்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருதப்படுகிறார்கள். பணவீக்கமும், பிற செலவுகளும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

இந்தியாவில் கிரீமிலேயர் வரம்பு கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம், ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக  கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. இந்த வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுப்பட்டு வரும் நிலையில், இப்போதுள்ள வரம்பே போதுமானது; இந்த வரம்பை உயர்த்த வேண்டியதில்லை என்ற முடிவுக்கு மத்திய அரசு எவ்வாறு வந்தது? என்பது தெரியவில்லை.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு கிரீமிலேயர் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த பிரிவிலும் கூறப்படவில்லை. இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் கிரீமிலேயர் முறை அறிமுகப்படுத்தப் பட்டது. கிரீமிலேயர் முறையே தேவையற்றது எனும் போது, அதற்கான வருமான வரம்பை உயர்த்த முடியாது என்று மத்திய அரசு கூறுவது ஓபிசிக்கள் மீது நடத்தப்படும் இரட்டைத் தாக்குதலாக அமைந்துவிடும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 1993-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 1 லட்சமாக இருந்தது. அதன்பின் பணவீக்கமும், வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் உயராததால் 11 ஆண்டுகள் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படவில்லை. அதன்பின்  2004-ஆம் ஆண்டில் 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் 2008-ஆம் ஆண்டில் ரூ.4.5 லட்சம், 2013-ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சம், 2017-ஆம் ஆண்டில் ரூ. 8 லட்சம் என 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் 2020-ஆம் ஆண்டிலும், நடப்பாண்டிலும் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். 2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அதை ஈடு செய்யும் வகையில் நடப்பாண்டில் கிரீமிலேயர் வரம்பு இன்னும் கூடுதலாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாது என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது ஓபிசி வகுப்பினருக்கு இழைக்கப்படும் பெருந்துரோகம் ஆகும்.

2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று, ஓபிசி கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற வல்லுனர் குழு பரிந்துரைக்கு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவதற்காக நடைபெற்ற முயற்சி ஆகியவற்றின் காரணமாகவே  2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படுவது தடைபட்டது. அதன்பின் 3 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இப்போதாவது கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.

2017-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்ட பிறகு, பணவீக்கமும், வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றன. ஓபிசி வகுப்பினருக்கான கிரீமிலேயர் வரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப் பட வேண்டும் என்று 2015-ஆம் ஆண்டிலேயே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்திருக்கிறது. அதன்பின் 8 ஆண்டுகளாகியும் அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் இருப்பது நியாயம் அல்ல. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அடுத்த சில மாதங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில், அதையும், அதிகரித்திருக்கும் பணவீக்கம் மற்றும் வருமானத்தையும் கருத்தில் கொண்டு ஓ.பி.சி. கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Ramadoss Say About OBC Reservation 022023


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->