ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானுடன் இந்தியா அணி மோதுமா? கிரீன் சிக்னல் தந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்!
Asia Cup T20 Cricket Will India face Pakistan Union Sports Ministry gives green signal
ஆசிய நாடுகளுக்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் செப்டம்பர் 9ம் தேதி துவங்குகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இம்முறை தொடர் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது.
இந்த முறை டி20 வடிவில் நடைபெறும் ஆசியக் கோப்பையில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம்பிடித்துள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் மோதும். பிரிவின் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். அங்கிருந்து முன்னணி 2 அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை செப்டம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துடனும், செப்டம்பர் 14ம் தேதி பாரம்பரிய எதிரி பாகிஸ்தானுடனும், செப்டம்பர் 19ம் தேதி ஓமனுடனும் ஆட உள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது இந்தியா–பாகிஸ்தான் இடையே அரசியல் பதற்றம் நிலவி வரும் நிலையில், இருநாடுகளுக்கிடையே தனிப்பட்ட தொடராக எந்த போட்டியும் நடத்தப்படவில்லை. இருப்பினும் ஆசியக் கோப்பை போன்ற பல்தரப்பு தொடர்களில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ளும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் 14ஆம் தேதி ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன என்பது உறுதியாகியுள்ளது.
English Summary
Asia Cup T20 Cricket Will India face Pakistan Union Sports Ministry gives green signal