இப்ப இல்லையென்றால், எப்பவும் இல்லை.. இதுதான் சரியான நேரம்.. மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் நீட் தேர்வு விவகாரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்கத் தொடங்கி விட்டனர்; அவர்களுக்கு விடிவுகாலம் பிறந்து விட்டதால், எந்த சலுகையும் தேவையில்லை என்று திட்டமிட்டு ஒரு பரப்புரை முன்னெடுக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவுகள் கருகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை. 7.5% இட ஒதுக்கீடு என்ற உயிர்த்தண்ணீர் உடனடியாக ஊற்றப்படவில்லை என்றால், அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது.

தமிழ்நாட்டில் 2019-20 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் 2557 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால், நடப்பாண்டில் இது 1615 ஆக குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காடு, கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் ஒரு விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதில் இருந்தே அவர்கள் எந்த அளவுக்கு  பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். நடப்பாண்டில் 1615 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதால், அவர்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து விடாது. மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களின் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவுள்ள குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்களை (கட்- ஆஃப்) எடுத்தவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களில் 400 மதிப்பெண்களுக்கும் கூடுதலாக ஒரே ஒரு மாணவர் மட்டும் தான் எடுத்துள்ளார். அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களைப் பொறுத்தவரை 4 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு கூடுதலாகவும், 14 மாணவர்கள் 400 மதிப்பெண் முதல் 500 மதிப்பெண்கள் வரையிலும் பெற்றுள்ளனர். 71 மாணவர்கள் 300 முதல் 400 மதிப்பெண்கள் வரையிலும் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், இந்த அளவு மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். ஆனால், நடப்பாண்டின் களச்சூழலில்  இந்த மதிப்பெண்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு போதுமானவை அல்ல என்பது தான் யதார்த்தம்.

முதற்கட்ட மதிப்பீடுகளின்படி நடப்பாண்டில் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு 500-க்கும் கூடுதலாகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 480-க்கும் கூடுதலாகவும், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 450-க்கும் அதிகமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்புகள் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில்  சேர இயலும். 7.5% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்ற இயலும்.

சமூக அடிப்படையில் வழங்கப்படும் செங்குத்து இடஒதுக்கீடாக (Vertical reservation) இருந்தாலும்,   பாலினம், மாற்றுத்திறன், புவியியல் அமைப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படும் கிடைமட்ட இட ஒதுக்கீடாக (Horizontal reservation) இருந்தாலும் அதை வழங்க மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளித்திருக்கிறது; அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.   எந்த இடஒதுக்கீடாக இருந்தாலும், அதை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தும் ஒரே  விஷயம் இட ஒதுக்கீட்டிற்கான தேவையும், நியாயமும் உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வரை அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்; ஆனால், இப்போது ஒற்றை இலக்கத்தில் கூட அவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடிவதில்லை என்பது உண்மை. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்த ஒற்றை தேவை போதுமானது. அடுத்து தமிழ்நாட்டில்  ஒவ்வொரு ஆண்டும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதுபவர்களில் 60 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களும், நீட் தேர்வு எழுதுபவர்களில் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களும் அரசு பள்ளி மாணவர்கள் ஆவர்.

மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதை விடக் குறைவாக 7.5% மட்டுமே  இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆகவே இட ஒதுக்கீட்டின் அளவும் சரியானது தான். 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க இந்த காரணிகளைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. ஒரு சில மணி நேரங்களில் இது குறித்து முடிவெடுக்க முடியும் எனும் போது, 4 மாதங்களுக்கும் மேலாக 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் முடிவெடுக்காமல் ஆளுனர் வீண் தாமதம் செய்வது நியாயமற்றது.

7.5% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசு பள்ளிகளில் படித்த சுமார் 400 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். எனவே, இனியும் தாமதிக்காமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு  7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss angry and Request about Medical seat Reservation govt school students tamilnadu


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal