உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுகிறதா அரசாணை...?- 3-வது பிரசவ விடுப்பு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!
Does government order violate Supreme Court ruling High Court dramatic ruling 3rd maternity leave issue
மூன்றாவது குழந்தை பிறப்பிற்கும் முழு ஒரு ஆண்டுக் கால மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், 12 வாரங்களுக்கு மட்டுமே விடுப்பு வழங்கும் அரசாணை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செயல்படும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றும் சாய் நிஷா, தனது மூன்றாவது பிரசவத்திற்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை மகப்பேறு விடுப்பு வழங்குமாறு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியிடம் மனு அளித்திருந்தார்.
ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த மாவட்ட முதன்மை நீதிபதி, அரசாணை விதிகளின்படி மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்க முடியும் என தெரிவித்து, ஏப்ரல் மாதத்திற்குள் பணியில் சேருமாறு உத்தரவிட்டார்.இந்த முடிவை எதிர்த்து சாய் நிஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு, “மூன்றாவது பிரசவமும் முதல் இரு பிரசவங்களைப் போலவே வலி மற்றும் வேதனையுடன் கூடியதே” எனக் குறிப்பிட்டனர்.
மேலும், இதனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பாக ஒரு ஆண்டு காலம் வழங்கப்பட வேண்டும் என முன்பே உத்தரவிட்டுள்ளன என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, மனுதாரரான சாய் நிஷாவிற்கு ஒரு ஆண்டு கால மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கும் அரசாணை, உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது என்றும், அந்த அரசாணை நீதித்துறையை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Does government order violate Supreme Court ruling High Court dramatic ruling 3rd maternity leave issue