டெல்டா "விவசாயிகள்" மீது பற்று இருக்கா..? நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்..!!
DMDK leader Vijayakanth condemns coal mine in Delta district
தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள டெல்டா பகுதிகளில் ஆறு இடங்களில் நிலக்கரி சுவங்கம் அமைப்பதற்கான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளுக்கு மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், விவசாயிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மன்னார்குடி திமுக எம்எல்ஏ ராஜா இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார். அதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளிக்க உள்ளார்.

இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் தமிழக விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல உள்ளது.
நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே வறட்சி, மழை நீரில் மூழ்கி விளைநிலங்கள் சேதம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது போன்ற சூழலில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.

மேலும் நிலக்கரி எடுக்க விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்படும். மேலும் விவசாயமும் கேள்விக்குறியாகி விடும். விவசாயிகள் மீது உண்மையில் பற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் மத்திய அரசு தற்போது விவசாயிகளுக்கு எதிராக்க திட்டத்தை அறிவித்திருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாய மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தேமுதிக தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
DMDK leader Vijayakanth condemns coal mine in Delta district