தேமுதிக 2026 தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை: அதிமுகவிடம் பேசிக் கொண்டே திமுகவிடம் டீலிங்! குழப்பும் பிரேமலதா! - Seithipunal
Seithipunal


2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தேமுதிகவை (DMDK) மீண்டும் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அதிமுக எதிர்பார்த்த பதிலை இதுவரை பெறவில்லை.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜகவுடனும், பாமக தலைவர் அன்புமணியுடனும் ஏற்கனவே இணைந்துள்ளது. பாஜக மூலமாகவே அன்புமணி கூட்டணியில் சேர்க்கப்பட்டதாகவும், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் 30 எம்எல்ஏ இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யுடனும் பேச்சுவார்த்தை நடத்திய எடப்பாடி, சர்வே முடிவுகள் மற்றும் விஜய்யின் பிடிவாத நிலைப்பாடு காரணமாக இறுதி முடிவை எடுக்கவில்லை.

இதற்கிடையில் தேமுதிகவுடன் மீண்டும் உறவை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. இரண்டாம் கட்ட அதிமுக தலைவர்களுக்கு தேமுதிகவை கூட்டணியில் உறுதி செய்யுமாறு எடப்பாடி உத்தரவிட்டிருந்தார். பல முறை பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து பேசியபோதும், அவர் கூட்டணியைப்பற்றி தெளிவாகப் பேசவில்லை. மேலும், ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டுக்குப் பிறகே எந்த முடிவும் அறிவிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியாக, பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் திமுக தரப்பிலும் இணக்கமான அணுகுமுறையை காட்டியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது, திமுக அரசின் செயல்பாடுகளை பாராட்டியது போன்ற நிகழ்வுகள் அதிமுக வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பிரேமலதா, அது நிறைவேறாததால் அதிமுக மீது அதிருப்தியில் இருந்தார். “ஒப்பந்தம் கையெழுத்தானது” என அவர் கூறியிருந்தாலும், “அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை” என எடப்பாடி பழனிசாமி மறுத்தது உறவை குளிர்வித்துவிட்டது.

அதிமுகவும், திமுகவும் இரண்டிலும் கடைசி நேர பேச்சுவார்த்தை நடைபெறும் வரை காத்திருப்பதே தற்போது தேமுதிகவின் நிலை என கூறப்படுகிறது. “எந்தக் கட்சி அதிக இடங்களையும், சலுகைகளையும் தருகிறதோ அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்” என்பதே பிரேமலதா விஜயகாந்தின் தற்போதைய அரசியல் கணக்கு என தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இருந்த காலத்தில் திமுக எதிர்ப்பு கட்சியாகவே இருந்தது. அவர் உயிருடன் இருந்தபோது திமுகவுடன் கூட்டணி கூட செய்யப்படவில்லை. ஆனால், தற்போது நிலை மாறிவிட்டது. கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் போல், கடைசி நேரம் வரை இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியில் தேமுதிக கூட்டணியில் சேர முடியாமல் போன வரலாறு மீண்டும் உருவாகுமோ என்ற பயம் கட்சி நிர்வாகிகளிடையே உள்ளது.

இந்த நிலையில், “இந்த முறை கூட திமுக, அதிமுக இரண்டும் கூட்டணிக்கு இடம் தராவிட்டால், தேமுதிக கட்சியின் அரசியல் நிலைமை மிக மோசமாகி விடும்” என உள்ளக நிர்வாகிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK 2026 election alliance talks Dealing with DMK while talking to AIADMK Confusing Premalatha


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->